Our Feeds


Saturday, October 3, 2026

Zameera

ஈரானிய எண்ணெய் கப்பல்களுக்கு சேவை வழங்கினால் இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

 


இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கினால், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.



அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் ஈரானியக் கொடியுடன் கூடிய 20 வெற்று எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தற்போது நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவுக்கு மசகு எண்ணெயை விநியோகித்துவிட்டு திரும்பிய இந்தக் கப்பல்கள், மலேசியா மற்றும் இலங்கை கடற்பரப்புகளுக்கு இடையில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்தக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கை நிறுவனங்களுக்கு ‘இரண்டாம் நிலைத் தடைகள்’ விதிக்கப்படக்கூடும் என அமெரிக்கத் தூதரகம் கடந்த ஆகஸ்ட் மாதமே எச்சரித்திருந்ததாகவும் ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ தெரிவித்துள்ளது.


இதனையடுத்து, கொழும்பு துறைமுக எல்லைக்குள் வந்த ஈரானிய கப்பல்களுக்கு சேவைகளை வழங்குவது பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்காது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையுடன் 20 வெற்று ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலங்கை கடற்கரைக்கு அருகில் சிக்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »