(எம்.மனோசித்ரா)
எனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மாறாக பாராளுமன்றத்தில் அது குறித்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாகவே அதைக் கருதுகின்றேன் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவது குறித்துத் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். பாராளுமன்றத்தில் இது குறித்த ஆரோக்கியமான விவாதமொன்று இடம்பெறும் போது, சபாநாயகர் என்ற ரீதியில் அனைத்து உண்மைகளையும் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்.
மேலும், அந்த விவாதம் எப்போது சபைக்கு வரும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன். சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காண்பிக்கப்படுவது உண்மையான கள நிலைமை அல்ல. சில தரப்பினர் தங்களது குறுகிய அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களை முன்வைத்து மாத்திரமே இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பொய் என்பது குளிர்பான போத்தலொன்றை திறந்தது போல குறுகிய காலத்தில் வேகமாகப் பரவக் கூடியது என்ற போதிலும், கசப்பானதாக இருந்தாலும் உண்மையை எவராலும் எக்காலத்திலும் மறைத்துவிட முடியாது. நாட்டின் பொதுவான உண்மையான கள நிலைவரத்தை யாராலும் மாற்றிவிட முடியாது. மக்களின் உண்மையான மனநிலையை மக்களிடம் இருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவை சுயநலவாதிகளின் கூற்றுகளிலிருந்து உருவாவதல்ல.
எதிர்க்கட்சியினர் கொண்டுவர முயலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காணப்படுகின்றன. அவை உரிய நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகச் சரிசெய்யப்பட்டு விவாதத்துக்கு வரும் பட்சத்தில், அதற்குரிய பதில்களைத் துணிச்சலாக வழங்குவதற்குத் நான் தயார் நிலையிலேயே இருக்கின்றேன் என்றார்.
