(செ.கவிஷனா)
அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் பரப்பப்படும் கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை ஆகும். தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாப்பதுடன் மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுலாத்துறையையும் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பிரஜா சவியட நவ பலயக்" (சமூக சக்திக்கு புதிய பலம்) சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளை விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்ச்சி வியாழக்கிழமை (29) அனுராதபுரம் தேரர்களுக்கான பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அனுராதபுரத்தின் வரலாற்றுப் பெருமையைப் பாதுகாத்து, புனித நகர அபிவிருத்தித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்டச் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் ஆலோசனைக் குழுவின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 3,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பண்டைய அனுராதபுர நகரத்தின் தொல்பொருள் இடிபாடுகள் மற்றும் நாகரிகச் சான்றுகள் நிலத்தடியில், 35 அடி ஆழத்தில் காணப்படுவதாகவும், அவற்றை வெளிக்கொணரும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளே அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ருவன்வெலிசாய தூபியைத் அப்புறப்படுத்தி சேதப்படுத்த முயல்வதாகவும், அதனைச் சுற்றிப் புதிய வேலி அமைக்கப்படுவதாகவும் பரப்பப்பட்டு வரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை ஆகும். 1981 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள புனித நகர திட்டத்தின் கீழ், மாடுகள் மற்றும் கால்நடைகள் புனிதப் பகுதிக்குள் நுழைவததைத் தடுப்பதற்காகவே வேலி அமைக்கப்பட்டுள்ளதே தவிர, பக்தர்கள் மற்றும் வழிபாட்டாளர்களின் வருகைக்கு எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை.
மதம் சார்ந்த உணர்வுகளைத் தூண்டிவிட்டு, தவறான பிரசாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பண்டைய வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் தீர்வு காணப்படவுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாடுகள் காரணமாகத் தங்களது வீடுகளில் கழிவறை வசதிகளைக்கூட அமைக்க முடியாமல் சிரமப்படும் குடும்பங்களுக்கு, 'லோளு கஸ்' பகுதியில் உள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பில் வீடுகள் அல்லது உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக மீள்குடியேற்றப்படவுள்ளனர். இம்மீள்குடியேற்றத் திட்டம் குறித்தும் சிலர் தவறான கருத்துக்களைப் பரப்ப முயல்கிறார்கள்.
அத்துடன், இலங்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் முதன்மை இடமாக அனுராதபுரம் விளங்குகின்றது. தற்போது நாளொன்றிற்கு 75,000 க்கும் மேற்பட்ட உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தபோதிலும், போதிய தங்குமிடம் மற்றும் வசதிகள் இல்லாததால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே அனுராதபுரத்திற்கு வருகை தருகின்றனர். புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் தங்குமிட வசதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். மேலும், இரமுசு (நன்னாரி) மற்றும் பொல்பாலா (சிறு பீளை) போன்ற உள்ளூர் மூலிகை பானங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சுற்றுலாப் பயணிகள் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறப்புச் சந்தைகளும், உணவு மையங்களும் உருவாக்கப்படும்.
இப்புதிய நகர வளர்ச்சித் திட்டமானது இப்பகுதியில் மாபெரும் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கும். அனுராதபுரத்தைச் சேர்ந்த சுமார் 2,000 சமூர்த்தி குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் வறுமையிலிருந்து மீட்கப்பட்டு, உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக உள்ளூர் தயாரிப்புகள் திரட்டப்பட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு விற்பனை செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த அனுராதபுரத்தின் வரலாற்றுப் பெருமையைப் பாதுகாத்து, நவீன பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு நகரை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
