Our Feeds


Tuesday, October 20, 2026

Zameera

சரண குணவர்தனவின் மனைவி உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்!

 



(நமது நிருபர்) 


முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு  இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்காக, மேல் நீதிமன்ற நீதிபதியொருவருக்கு  இஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  சரண குணவர்தனவின் மனைவி உட்பட இருவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு  நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி உள்ளிட்ட சந்தேகநபர்கள்  இன்று செவ்வாய்க்கிழமை  (20) கொழும்பு  நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே  நீதிவான் அசங்க எஸ். போதரமை இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.


எனினும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரான  நீதிமன்றப் பதிவாளரை தலா 10 இலட்சம் ரூபா  பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இன்று செவ்வாய்க்கிழமை  (20)  சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பின்னரே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கன்றில் தனது கணவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், குறித்த நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டிலேயே சரண குணவர்தனவின் மனைவியான சினாரி லக்மாலி ஹெட்டியாரச்சி கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


இதனைத்தொடர்ந்து, குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக சந்தேகிக்கப்படும் கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளரும், இலஞ்சம் வழங்குவதற்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக சந்தேகிக்கப்படும்  நீதிமன்றப் பதிவாளர் ஒருவரும்  கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட  சந்தேகநபர்கள்  கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை ஒக்டோபர் 20ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்த 'வாட்ஸ்அப்'  செயளியை பரிசோதித்தபோது, குறித்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய செய்திகளும் பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களும் கண்டறியப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள்  ஏற்னவே  நீதிமன்றத்துக்கு  அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »