ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மூவர் உடனடியாக சேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அந்த பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பாளர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை நாளை (27) நடைபெறவுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பகுதியைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்ற 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
பொலிஸாரின் கொடூரத் தாக்குதல் காரணமாகவே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நேற்று (25) காலை சந்தேகநபரைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது பொலிஸார் அவரைத் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர் உறவினர்களின் தீவிர கோரிக்கைக்கு இணங்க சந்தேகநபரை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சேர்க்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்தபோதிலும் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
