Our Feeds


Saturday, October 31, 2026

Zameera

நாட்டைத் தூய்மைப்படுத்தி சரியான பாதையில் கொண்டு செல்வதற்காகவே மக்கள் எமக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளனர் - சதுரங்க அபேசிங்ஹ

 

(க.சிவலிங்கமூர்த்தி)


இந்த நாட்டைத் தூய்மைப்படுத்தி, சரியான பாதையில் கொண்டு செல்வதற்காகவே மக்கள் எமக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கியுள்ளனர். சட்டத்தை மதிக்கும் நாடு, புதிய பொருளாதாரப் பயணம் மற்றும் புதிய அரசியல் கலாசாரம் என்பனவே மக்கள் எம்மிடம் எதிர்பார்த்த பிரதான மாற்றங்களாகும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று சனிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்


மக்கள் புதிய அரசியல் அணியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தபோது, நாட்டில் தெளிவான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என எதிர்பார்த்தனர். தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசாங்கம் முன்னெடுக்கும் பயணம் தொடர்பில் மக்கள் ஓரளவுக்குத் தெளிவான புரிதலைக் கொண்டுள்ளனர்.



எனினும், பொருளாதார ரீதியாக நாட்டை முன்னேற்றுவதற்கு உலகச் சந்தையில் இலங்கைக்கான பங்கினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காகக் கைத்தொழில், சேவை மற்றும் விவசாயத் துறைகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து, சர்வதேச வர்த்தகத்தில் கணிசமான இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


இதனைச் சாத்தியப்படுத்துவதற்கு வலுவான அரச சேவை அவசியமாகும். பல தசாப்தங்களுக்குப் பின்னர் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் திருத்தப்பட்டுள்ளதுடன், சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஓரளவு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தசாப்தங்கள் தாமதமடைந்த அரச சேவையின் டிஜிட்டல் மாற்றமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இன, மத, சாதி வேறுபாடுகளைக் கைவிட்டு ஒரே நாடாக முன்னேற முயற்சிக்கும் நிலையில், பிற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட சில தரப்பினர் இந்தப் பயணத்தைத் தடுக்க முற்படுகின்றனர். கடந்த காலங்களில் அரச நிதியைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர்.



அதேவேளை, போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்கள் இளைய தலைமுறையின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகியுள்ளன. பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், போதைக்கு அடிமையான பெற்றோர்களால் உருவாகும் குடும்பப் பிரச்சினைகளும் கவலைக்குரியவை. இவற்றைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும், பாதுகாப்புப் பிரிவினரையும் சட்ட அமுலாக்கக் கட்டமைப்பையும் பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.


மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிராமிய அபிவிருத்திப் பணிகள் வேகமடைந்துள்ளன. குடிநீர், போக்குவரத்து, உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


2022 முதல் 2026 வரையான வரவு செலவுத் திட்டங்கள் பொருளாதாரச் சுருக்கத்தையும் செலவுக் கட்டுப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. கைத்தொழில், விவசாயம் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை ஈர்க்கும் முன்மொழிவுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.


எனவே, உற்பத்தித்திறனை அதிகரித்து, அரச சேவையை வலுப்படுத்தி, சட்டத்தை மதிக்கும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். உலக வர்த்தகச் சந்தையில் இலங்கைக்கான பங்கினைப் பெற்றுக்கொள்வதே எமது பிரதான இலக்காகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »