Our Feeds


Friday, October 16, 2026

ShortNews

ஷிரந்தியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!



‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

அதன்படி, தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவமனையினால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விசேட விடயங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி, ஷிரந்தி ராஜபக்சவுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கு இன்று பிற்பகல் 2.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, அவரது இதயத்தின் இடது பிரதான தமனியில் 80 முதல் 90 சதவீத அடைப்பு காணப்படுவதாகவும், அவசரமாக இதயப் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபரான பிரதீப் காரியவசம் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் இயந்திரம் வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 100 இலட்சம் ரூபா பெறப்பட்டு அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »