(க.சிவலிங்கமூர்த்தி)
ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டம் செப்டெம்பர் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெற்ற நிலையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளினதும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வது வழமையாகும். ஆனால் குறித்த கூட்டத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செல்லாததன் காரணம் என்ன என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உலகில் உள்ள அனைத்து நாடுகளினதும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வது வழமையாகும். நாட்டின் அரச தலைவர் என்ற வகையில், தமது நாட்டின் நிலைமை, மக்களின் நிலைமை மற்றும் நாட்டின் முன்னேற்றங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைப்பதற்காக அவர் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
ஆனால், இலங்கையின் சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செல்லவில்லை. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ளார். விஜித ஹேரத் ஒரு தாளைப் பார்த்துக்கொண்டு உரையாற்றியுள்ளார். அவர் கூறிய விடயங்கள் அங்கு இருந்த பிரமுகர்களுக்கு புரிந்ததா என்பது தெரியவில்லை. ஆங்கிலத்தில் பேச முடியாவிட்டால் சிங்கள மொழியில் பேசியிருக்கலாம்.
இஸ்ரேலிய பிரதமர் தனது நாட்டின் நிலைமை மற்றும் தனது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக உரையாற்றியுள்ளார். ஆனால், எமது அரச தலைவர் இங்கே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்கு கட்டாயம் சென்றிருக்க வேண்டும். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் காரணமாகத்தான் நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்கு செல்லவில்லையா?
நீங்கள் இந்த நாட்டின் அரச தலைவர். நாட்டின் முப்படைகளின் தலைவரும் நீங்கள்தான். பொலிஸாருக்கும் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் தலைவராக இருப்பவரும் நீங்கள்தான். எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் போன்ற முக்கியமான சர்வதேச மாநாட்டில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக நாட்டில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பார்கள். நாட்டின் அரச தலைவர் என்பதனாலேயே அவரைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. எனவே, ஜனாதிபதி அந்த மாநாட்டுக்கு செல்ல முடியாததற்கான உண்மையான காரணம் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சீலரத்ன தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.