சிங்கள பௌத்தர்களுக்கு எதிராகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. வடக்குக்கு ஒரு நீதி, தெற்கிக்கு பிறிதொரு நீதி, ஞானசார தேரரின் காவியுடையை களைத்து பௌத்தர்களின் மீதான வெறுப்பை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை மகிழ்விப்பதற்காகவே ஞானசார தேரர் தண்டிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை எவ்வழியிலாவது நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.ஊழல் குற்றங்களுக்காக நீதிவான் நீதிமன்றத்தில் வழங்கப்படும் பிணையை இரத்துச் செய்து அந்த அதிகாரத்தை மேல் நீதிமன்றத்துக்கு வழங்கும் வகையில் கொண்டு வந்த திருத்தத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை. அவ்வாறு அனுமதியளித்திருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஆணைக்குழு உண்மையில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகிறது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை கைது செய்வதற்காக அரச அதிகாரிகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். ஆணைக்குழு அவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கிறது.
கிரிஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்குமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழுத்தம் பிரயோகித்துள்ளது.இது முற்றிலும் தவறானதொரு எடுத்துக்காட்டு.
இந்த அரசாங்கம் சிங்கள பௌத்தர்களுக்கு எதிராகவே ஆரம்பத்தில் இருந்து செயற்படுகிறது. பௌத்தர்களின் உரிமைக்காகவும், சிங்களவர்களுக்காகவும் குரல் கொடுத்த ஞானசார தேரர் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்காக இன்று தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது காவியுடை களைக்கப்பட்டுள்ளது.இது முற்றிலும் தவறானது. என்றார்.
