(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஊழலற்ற நாட்டை உருவாக்கி, அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான வேலைத்திட்டத்தையே அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது என பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் என்ன செய்திருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் எம்மை நோக்கி கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் 2015இல் அதிகாரத்துக்கு வரும்போது ஊழலை இல்லாமலாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தார்கள். ஆனால் தற்போது கைதுசெய்யப்படுபவர்கள் அனைவரும் கடந்த அரசாங்க காலங்களில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களாகும்.
அதேநேரம் ஊழல் மோசடி தொடர்பான தரப்படுத்தலில் எமதுநாடு 2024ஆம் ஆண்டில் 121ஆவது இடத்தில் இருந்தது. ஆனால் எமது இரண்டு வருட காலங்களில் அந்த தரப்படுத்தலில் 107ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
அதேபோன்று புள்ளி வழங்கும் திட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஊழல் ஒழிப்புக்கு எமக்கு 32 புள்ளிகளே கிடைத்திருந்தது. தற்போது 35 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் எமது இரண்டு வருட காலத்தில் ஊழலை ஒழிப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கே இந்த பிரதிபலன்கள் கிடைத்திருக்கின்றன.
மேலும் கடந்த காலங்களில் எமது நாட்டுக்கு கிடைக்கப்பெற இருந்த பல அபிவிருத்தி திட்டங்கள் இழக்கப்பட பிரதான காரணமாக இருந்தது ஊழல் மோசடிகளாகும். 100 மில்லியன் ரூபாவுக்கு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால், சுமார் 30 மில்லியன் ரூபாவே அந்த வேலைத்திட்டத்துக்கு செலவிடப்பட்டிருக்கும். 70 மில்லியன் ரூபா வேறு விடயங்களுக்கு செலவிடப்படுகிறது.
அதேபோன்று கடந்த காலங்களில் தொழில் வழங்குவதிலும் ஊழல் இடம்பெற்றிருக்கிறது. தங்களுக்கு வாக்களித்தவர்களை தெரிவுசெய்தே தொழில் வழங்கும் நடைமுறை இருந்தது. அதிலும் உயர்ந்தவராக பாதுகாப்புத் துறையிலும் குட்டையானவராக இருந்தால் தொழிலாளர் என்ற அடிப்படையிலே வழங்கிவந்தார்கள்.
ஆனால் எமது அரசாங்கத்தில் அவ்வாறான எந்த நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை. தகுதியானவர்கள் உரிய விதிப்படி தெரிவுசெய்தே தொழில் வழங்கப்படுகிறது.
அதேபோன்று எமது அரசாங்கம் தற்போது ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டனை வழங்கி வருகிறது. அதனால் முதலீட்டாளர்களுக்கு எமது அரசாங்கம் மீது நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. எனவே, தற்போது சமர்ப்பித்திருக்கும் புதிய ஊழல் ஒழிப்பு சட்டம் மூலம் நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
