Our Feeds


Friday, October 16, 2026

Zameera

சிறையில் பௌத்த பிக்குகளின் ஆடை தொடர்பில் புதிய சுற்றறிக்கை!

 

(இராஜதுரை ஹஷான்)


பௌத்த பிக்குகள் சிறைச்சாலைக்குள் அணியும் ஆடை குறித்து பௌத்த விவகார திணைக்களம் மற்றும் சங்க சபையுடன் கலந்துரையாடி முரண்பாடற்ற தீர்மானம் எடுக்கப்படும். புதிய விதிமுறைகளுடனான சுற்றறிக்கை இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என சிறைச்சாலை பதில் ஆணையாளர் நாயகம் ஏ.எஸ்.கஜநாயக்க குறிப்பிட்டார்.


மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை இன்று வெள்ளிக்கிழமை (16) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


பௌத்த பிக்குகள் ஏதேனும் குற்றத்துக்காக  சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்  குறித்து, சுற்றறிக்கையில் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அது தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளோம்.


தற்போதும் சிறைச்சாலைகளில் பிக்குகளுக்கு எனத் தனியான பிரிவுகள் உள்ளன. அதற்கு மேலதிகமாக ஏனைய வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


புதிய விதிமுறைகளின்படி, பிக்குகள்  மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்ட பின்னர், சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்துச் செல்லப்படும் போது,அவர்களைத் அவர்களின் காவியுடையுடன்  அல்லது அந்தந்த மதத் தலைவர்களுக்குரிய உத்தியோகபூர்வ ஆடையுடனும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.


அதேபோல், சிறைச்சாலைக்குள் இருக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மகா சங்கத்தினரிடம் ஆலோசித்தோம். அவர்கள் அதுகுறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எமக்கு அறிவித்தனர். அத்துடன்,இவ்வாறான சந்தர்ப்பங்களில், பிக்குகள் சார்ந்த சங்க சபைக்கும், பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கும் அறிவுறுத்தி அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக  செயற்படுவோம்.


சிறைச்சாலைகளில் சாதாரன குற்றங்களுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை வீட்டுக் காவலில் வைப்பதற்கு  புதிய நடைமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. போதைப்பொருள் மட்டுமன்றி, ஏனைய குற்றங்களுடன் தொடர்புடையவர்களைச் சிறையிலடைப்பதற்கு முன்னர், அவர்களை வீடுகளிலேயே தடுத்து வைத்து எம்மால் கண்காணிப்பதற்கான ஒரு நடைமுறையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிக்க மாட்டோம், சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யவே நடவடிக்கை எடுக்கப்படும்.குறிப்பாக, அதிக நெருக்கடிமிக்க சிறைச்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றி, சர்வதேச மட்டத்திலான வசதிகளை வழங்கக்கூடிய சிறைச்சாலைகளாகச் செயற்படுத்தத் தயாராக உள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »