Our Feeds


Monday, November 2, 2026

ShortNews

கலைக்கப்படும் அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்கள் - நிதி அமைச்சு!


அரசுக்குச் சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைவாக அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான விசேட பிரிவொன்று கடந்த மார்ச் மாதம் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரிவு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரச நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதி (EPF) ஊழியர் நம்பிக்கை நிதி ((ETF) மற்றும் பணிக்கொடை (Gratuity) கொடுப்பனவுகள் தொடர்பில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தொகைகளை தீர்ப்பதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறித்த நிலுவைகளைச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபாயில் 2.8 பில்லியன் ரூபாய் 2026 ஆகஸ்ட் மாதம் முடிவடையும் போது செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அரச நிறுவனங்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

மூலப்பொருட்களின் செலவு அதிகரிப்பு விநியோகம் செய்யும் நடைமுறைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் ஆர்டர்கள் இரத்து செய்யப்படல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அந்த சவால்களுக்கு மத்தியிலும் முக்கியமான 51 அரச நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 259.3 பில்லியன் ரூபாய் மொத்த இலாபத்தை பதிவு செய்துள்ளதாக அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »