Our Feeds


Wednesday, November 18, 2026

Zameera

அடுத்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் 65–70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் – அமைச்சர் அநுர கருணாதிலக்க

 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


அடுத்த வருடத்தில் அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பளம் குறைந்தபட்சம் 65 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் . அத்துடன் அரசாங்க ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என துறைமுகங்கள், விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான நான்காம்  நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


2027ஆம் ஆண்டுக்கான அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், சம்பள ஆணைக்குழுவின் மீளாய்வுப் பணிகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. அதன் அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேவேளை பிரதேச செயலாளர்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.



வரவு செலவுத் திட்டம் என்பது ஒரு வருடத்துக்கான வருமானம் மற்றும் செலவினங்களைக் கொண்ட ஆவணம் மாத்திரமல்ல. அது அரசாங்கத்தின் தேசிய கொள்கைப் பிரகடனமாகவும் அமைகின்றது. உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பில் இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


அதேநேரம் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியை மறந்துவிட முடியாது. அந்த நெருக்கடியின் விளைவாக நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான பணியாக இருந்தது. இதற்காக செலவினங்களைக் கட்டுப்படுத்துதல், கடன் முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல், ஏற்றுமதி வருமானம் மற்றும் முதலீடுகளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.


அதனால் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டே இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் வரவு செலவுத் திட்டமாகக் குறிப்பிட முடியும். கடன் சுமையைக் குறைப்பதற்கு பொருளாதாரச் சுருக்க நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானதல்ல. கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை அதிகரிப்பதற்காக தேசிய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும்.


2022ஆம் ஆண்டில் அரச வருமானத்தில் 79 சதவீதம் கடன் வட்டியைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. எனினும், 2025ஆம் ஆண்டில் அது 45 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிதி ஒழுக்கத்தைப் பேணாமல் உண்மையான பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது.


வரவு செலவுத் திட்டத்தை ஆய்வு செய்து, அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவது எதிர்க்கட்சியின் பொறுப்பாகும்.  ஆனால், பகுப்பாய்வு அடிப்படையிலான கருத்துகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் முன்வைப்பதில் எதிர்க்கட்சி தோல்வியடைந்துள்ளது. அரசாங்கத்தை விமர்சிப்பதன் மூலம் மாத்திரம் எதிர்க்கட்சியின் பலத்தை அளவிட முடியாது.  அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நியாயமான முறையில் வழங்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பே அதன் பலத்தை வெளிப்படுத்தும்.


நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கும் முதலீடுகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கும், கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் குளிர்பதன வசதிகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மின்சாரக் கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கான சாதகமான முன்மொழிவுகளும் இடம்பெற்றுள்ளன.


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் விநியோகமும் ஸ்திரமான சந்தைச் சூழலும் மிகவும் அவசியமானவை. எனவே, தேசிய எரிபொருள் கையிருப்பு மற்றும் விநியோகத் திறனை படிப்படியாக அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.



சமூகப் பாதுகாப்புக்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.. மக்கள் மேற்கொள்ளும் தியாகங்களுக்கான பலன்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்காக சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.


2027ஆம் ஆண்டளவில் அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்படும். சாரதிகள், நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 65 முதல் 70 சதவீதம் வரையான சம்பள அதிகரிப்பு கிடைக்கும்.


அரச ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களின் சம்பள உரிமைகளைப் புறக்கணிக்கக் கூடாது. அதேவேளை, அறவிடப்படும் வரிகள் தொடர்பில் மக்களுக்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.


அத்துடன் 162,500 ரூபாவுக்கும் குறைவான மாதச் சம்பளம் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் மக்களின் வரிச்சுமையைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »