Our Feeds


Wednesday, November 18, 2026

Zameera

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை அடக்கவே தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர் – சஜித் குற்றச்சாட்டு

 

(எம்.மனோசித்ரா)



மக்களின் எதிர்பார்ப்புகளைச் சுக்குநூறாக்கிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ள அரசாங்கம், அதற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவதைத் தடுப்பதற்காகவும், மக்கள் எழுச்சியை அடக்குவதற்காகவும் தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்து தண்டனை வழங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.


தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்கிழமை (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த போது ஊடகங்களுக்குக் கருத்துத் வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


அங்கு மேலும் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர்,


பெற்றோலியம், மின்சார உற்பத்தி மற்றும் வலுச்சக்தித் துறை தொடர்பாக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருபவரும், நுகர்வோரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஆனந்த பாலித்த திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான உபுல் ஜயசூரிய தலைமையில் சுயேச்சையான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது.


நாட்டில் ஜனநாயகத்திற்கான வெளியும் உரிமைகளும் மோசமடைந்து வருகின்றன. பாராளுமன்றத்திற்குள் மக்கள் சார்பாகக் கேள்வி எழுப்ப முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது அவற்றை ஹன்சார்டிலிருந்து நீக்குவதற்கும் சபாநாயகர் தலைமையிலான குழு செயற்பட்டு வருகிறது.


பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் கூட இல்லாத கடுமையான சர்வாதிகார ஆட்சிப் போக்குக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இது சாதாரண மக்களுக்கும், தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் போலவே எதிர்க்கட்சிக்கும் ஒரே மாதிரியாகவே காணப்படுகிறது.


மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றிய வரவு செலவுத் திட்டத்தால் உழைக்கும் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளமையால், தொழிற்சங்கத் தலைவர்களை இவ்வாறு தண்டித்து வருகின்றனர். இந்த ஜனநாயகக் கட்டமைப்புகளையும் செயல்முறைகளையும் இல்லாதொழிக்க நாம் எப்போது இடமளிக்க மாட்டோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »