தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வவுனியா நகரப் பகுதியிலுள்ள பல்வேறு வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள மரக்கறிச் சந்தை, நகரப் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடிகள், புடவைக் கடைகள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறிப்பாக, உணவகங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதுடன், நுளம்புகள் பெருகுவதற்கான சூழலைக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
இந்தத் திடீர் சோதனையின்போது, சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறிய மற்றும் அவற்றை மீறிச் செயற்பட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தக நிலையங்களின் சுற்றுச்சூழலை உடனடியாகச் சீரமைத்து, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதாரப் பிரிவினரால் கடுமையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
