Our Feeds


Monday, November 2, 2026

Zameera

மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் சஜித் பிரேமதாச - ரஞ்சித் மத்தும பண்டார

 

சஜித் பிரேமதாச அதிகமாகப் பேசுகிறார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி மத பாரபட்சமின்றி மக்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டுள்ள ஒரே தலைவராக சஜித் பிரேமதாச ஆவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும்ம பண்டார தெரிவித்தார்.



பொலன்னறுவையில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


நாட்டின் நலன் கருதி இரு பிரதான கட்சிகளும் இணைய வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த வெற்றிகரமான அரசியல் கூட்டு மிக விரைவில் உருப்பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அரசியல் செய்திகள்



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒருபோதும் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடாத, எந்தவிதக் கறைகளும் படியாத ஒரு தூய்மையான அரசியல் தலைவர் அவர் ஒருவர் மட்டுமே. நன்கு கல்வி கற்றுத் தேர்ந்துள்ள அவர், அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பரந்த அறிவுடன் கருத்துக்களை முன்வைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்.


சஜித் பிரேமதாச அதிகமாகப் பேசுகிறார் என்ற விமர்சனங்கள் சிலரால் முன்வைக்கப்பட்டாலும், அவர் வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி ஆக்கபூர்வமாக வேலைகளைச் செய்து முடிப்பவர். அண்மைக்காலத்தில் நாட்டில் பௌத்த விகாரைகளுக்கும் தாதுகோபுரங்களுக்கும் அதிகளவில் உதவி செய்த தலைவராக அவர் விளங்குவதுடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களைப் புனரமைத்தல், முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு ஆதரவளித்தல் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பாரபட்சமின்றி உதவி புரிந்துள்ளார்.



மேலும், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே பாடசாலைகளுக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறைகளையும் புதிய தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றார். கடந்த கால வன்முறைகளும் அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டுள்ள ஒரே தலைவராக சஜித் பிரேமதாச விளங்குகிறார்


ஜே.வி.பி. காலகட்டத்தில் இடம்பெற்ற கர்ப்பிணித் தாய்மாரின் வயிற்றை அறுத்துக் குழந்தைகளை வெளியே எடுத்த கொடூரங்களும், மக்கள் வாக்களிக்கச் சென்றபோது ஒரு வாக்குச் சாவடியிலேயே நான்கு பேர் கொல்லப்பட்ட கொடூர சம்பவங்களும் இடம்பெற்றது. இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான மற்றும் கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடம் மக்கள் மீதான அன்பு இருக்க முடியாது, சஜித் பிரேமதாச மட்டுமே மக்கள் மீது உண்மையான அன்பு கொண்டு நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவர்.


தற்காலத்தில் இந்நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து இங்கேயே தங்கி வாழ்வதற்கு ஏற்ற வகையில் நாட்டின் பொருளாதாரம் உடனடியாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.


வரலாற்று ரீதியாக டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோர் உருவாக்கிய பொற்கால மறுமலர்ச்சி மீண்டும் இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் 1988–1989 ஜே.வி.பி. கால வன்முறைகள், 2001 ஆம் ஆண்டு மற்றும் கோட்டாபயவின் ஆட்சி காரணமாகப் பொருளாதாரம் பலமுறை பின்னடைவைச் சந்தித்து எதிர்மறை வளர்ச்சிக்குச் சென்ற போதெல்லாம், இந்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுத்த வரலாறு தங்களது பாரம்பரியத் தலைமைத்துவங்களுக்கே உண்டு.


எனவே, நாட்டை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசெல்லவும், விவசாயிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களையும் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மிக விரைவில் கைகோர்த்து ஒருமித்த பயணத்தை முன்னெடுக்கும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »