Our Feeds


Monday, August 31, 2026

ShortNews

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் - சஜித்!


அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு, நாட்டின் ஜனநாயகம் சீரழிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்சித் தலைமையகங்களின் விருப்பத்திற்கேற்ப, இளைஞர் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை நியமிப்பதன் மூலம், நீதித்துறையிலும் செல்வாக்கு செலுத்தப்படும் ஒரு சகாப்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது நீதி வழங்கும் செயன்முறையையே தடுக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அபிவிருத்தியின் போதும் அனர்த்தங்களின் போதும் அரச சார்பற்ற மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆற்றும் சேவை, உயர்வாக மதிக்கப்பட வேண்டுமென்றும், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தாமல் பலவந்தமாக அவற்றைக் கட்டுப்படுத்த முற்படக் கூடாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டமைப்பு மாற்றமொன்றை வழங்குவதாக வாக்களித்து ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கம், இன்று விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் மீது கடுமையான அரச அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கும் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டுமென்றும்,வலியுறுத்திய அவர் ஜனநாயகம் மற்றும் சிவில் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

Zameera

வைத்தியசாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது


 யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து இன்று (31) அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.




2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.




இந்நிலையில், மறுநாள் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாகக் கூறி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கைதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.




இதனையடுத்து சிறைக்காவலர்கள் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த நிலையில் குறித்த கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.




சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ShortNews

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசினால் வாழ்க்கைச் சுமையால் மக்கள் திணறல் - முஜிபுர் ரஹ்மான்!


செல்வந்த நாடு - அழகான வாழ்க்கை' என்ற தேர்தல் வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், மக்களுக்கு வழங்கிய பொருளாதாரச் சலுகைகள் எதையுமே நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் விசனம் வெளியிட்டார்.

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், நாட்டின் வாழ்க்கைச் சுமை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திங்கட்கிழமை (31) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த மாதத்தில் பணவீக்கம் 7.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அண்மையில் பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை அரசாங்கமே உயர்த்தியதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளன. பாடசாலை உபகரணங்கள், குடிநீர்க் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாகக் குறைந்து, ரூபாயின் மதிப்பும் சரிவடைந்துள்ளது. வர்த்தகர்களும் இறக்குமதியாளர்களும் தங்கள் விருப்பத்திற்கேற்ப விலைகளை உயர்த்தும் அநிச்சயமான சூழலைச் சந்தையில் அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன், இது குறித்து வர்த்தக அமைச்சரும் எந்தவொரு கவலையும் கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்படுகிறார்.

அரசாங்கத் திறைசேரியில் பணம் நிறைந்து வழிவதாகக் கூறினாலும், அது பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட அநியாய வரிகள் மூலம் திரட்டப்பட்டதே தவிர, அதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் சிறு, நடுத்தர வியாபாரிகள் என அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் சாதாரணமாக வாழ்வதற்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் 150,000 ரூபா தேவைப்படுகிறது. இதனால் மூன்று வேளை உண்ட மக்கள் இன்று இரண்டு வேளையாகவும், இரண்டு வேளை உண்டவர்கள் ஒரு வேளையாகவும் உணவைக் குறைத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தபோதிலும், அரசாங்கம் பெட்ரோல் விலையை 15 ரூபாவினால் மட்டுமே குறைத்து தன் முகத்தைக் காப்பாற்ற முயன்றுள்ளது. வர்த்தக மற்றும் போக்குவரத்துத் துறைக்கு அத்தியாவசியமான டீசல் விலையிலோ அல்லது ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையிலோ எவ்வித குறைப்பும் செய்யப்படவில்லை. உள்நாட்டிலேயே சுத்திகரிக்கப்படும் மண்ணெண்ணெய் விலை 280 ரூபாவாக உயர்ந்துள்ள நிலையில், ஏழை மக்களுக்கு அந்தச் சலுகை கூட வழங்கப்படவில்லை. அரசாங்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எந்தவொரு தெளிவான திட்டமும் இல்லாமல் பொருளாதாரத்தை மிதக்க விட்டுள்ளதால், பொதுமக்கள் பேரழிவைச் சந்தித்து வருகின்றனர்.

ShortNews

நான்கு ரயில் சேவைகள் இரத்து!


ரயில் எஞ்சின் மற்றும் 'பவர் செட்' (Power set) பற்றாக்குறை காரணமாக, நான்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்தார்.

இதற்கமைய, களனிவெலி பாதையில் இரண்டு ரயில் சேவைகளும், பிரதான பாதையில் இரண்டு ரயில் சேவைகளும் உட்பட மொத்தம் நான்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் பார்சல் போக்குவரத்து ரயிலுக்காக ஈடுபடுத்துவதற்கு ரயில் எஞ்சின் இல்லாததால், இன்றைய தினம் அந்த ரயிலின் இரண்டு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றும் நாளையும் பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயிலும், காலை 5.55 மணிக்கு அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் ரயிலும், பவர் செட் இல்லாத காரணத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே திணைக்களத்தில் தொடர்ந்து ரயில்கள் ரத்தாவதும், தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளதால், தினசரி ரயிலைப் பயன்படுத்தும் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ShortNews

இன்னும் ஒரு மாதம் - அர்ச்சுனா எம்.பி!


பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் வழக்கு விசாரணைக்கமைய, இன்னும் ஒரு மாதம் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா எம்.பி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன மனுவை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு அக்டோபர் 12 அல்லது 13 ஆகிய திகதிகளில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.

இதன்போது, 22வது திருத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ''நாங்கள் 22வது திருத்தத்தை எதிர்க்கிறோம். ஒரேயடியாக இந்த 22வது திருத்தத்திற்கு நாம் வாய்ப்பு அளித்துவிட்டால், அதற்குப் பிறகு அரசாங்கத்திற்குத் தேவையானவாறு இந்தத் திருத்தங்களை மாற்ற முடியும் என்று சொல்லக்கூடும்.

அதனால் நாங்கள் வழக்கறிஞர்களுடன் இருக்கிறோம், நான் பாராளுமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தெளிவான கொள்கையுடனும் முதுகெலும்புடனும் பேசுவேன். அதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் மக்கள் தீர்ப்பிற்கு, அதாவது சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

அப்படி இல்லையென்றால் அடுத்த தேர்தலுக்கு தயராக வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.'' என கூறியுள்ளார்.

ShortNews

ரவி பிணையில் விடுதலை!



இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று(31) அழைத்துச் செல்லப்பட்ட போது, அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வருகைதந்தார்.

பல மணி நேர விசாரணையை தொடர்ந்து, நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்து, பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலே அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு வெளியே, ஐந்து நபர்கள் தேசிய லொத்தர் சபையில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, பின்னர் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர்களுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டார்.

விசாரணையாளர்களின் கூற்றுப்படி, கருணாநாயக்க இதற்கு முன்னர் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார், ஆனால் அந்தச் சமயங்களில் அவர் ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.

விசாரணை தொடர்பாக, இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்தரமுல்லவில் உள்ள ராஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள கருணநாயக்கவின் இல்லத்திற்கும் விசாரணையாளர்கள் சென்றிருந்தனர். இருப்பினும், அந்தப் பயணத்தின்போது அவர் வீட்டில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ShortNews

துறைமுகத்தில் சிக்கிய போதைப்பொருள் - தொழிலதிபர் கைது!


கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொள்கலனிலிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHAHNI RAMEES

அமெரிக்கச் சிறையிலிருந்து புகைப்படங்களை வெளியிட்டார் வெனிசுலா முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ!


அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர்

ShortNews

மன்னார் படுகை எண்ணெய் ஆய்வு எங்களுடைய திட்டம் - சம்பிக்க


"மன்னார் படுகை எண்ணெய் ஆய்வு என்பது எங்களுடைய திட்டம்! முதலீட்டாளர்கள் வராததாலேயே கைவிடப்பட்டது..'' - பாடலி சம்பிக்க

ShortNews

இஷாரா செவ்வந்தி இந்தியா செல்ல உதவியவர் கைது!


இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் செல்வசேத் எனப்படும் ‘பலசி’ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல குறித்த நபர் படகு வழங்கி உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ShortNews

ரவி கருணாநாயக்க நீதிமன்றில்!


இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டம் ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இந்த விசாரணை தொடர்பில் முன்னர் வாக்குமூலம் அளிப்பதற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அந்தச் சந்தர்ப்பத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதன் காரணமாக அண்மையில் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கும் சென்றிருந்த நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை.

தனது மகளின் திருமணக் கடமைகள் காரணமாக வாக்குமூலம் அளிப்பதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்றைய தினம் இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையானதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ShortNews

குடிநீர் பற்றாக்குறையால் 81,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!



நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 24 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாகத் தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகத் தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்தார்.

வறட்சியான வானிலையால் அதிக பாதிப்பு மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களிலேயே ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது தவிர அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் வறட்சியான வானிலை காரணமாகக் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகக் குடிநீர் விநியோகத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி வரும் நாட்களில் இந்நிலைமை தீவிரமடையக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மாவட்டச் செயலாளர்களுக்கு விடுவிக்கப்படும் என்றும் கூறினார்.

இதுவரை குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளில் ஏதேனும் சிக்கல்கள் நிலவினால், உடனடியாகச் சம்மந்தப்பட்ட பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
SHAHNI RAMEES

இதுக்கு இல்லையா Sir ஒரு END?

 


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'டிரூத் சோஷியல்'