Our Feeds


Wednesday, September 9, 2026

Zameera

வாகன இலக்க தகடுகள் 6 மாதங்களுக்குள் விநியோகிக்கப்படும்


 தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 


அனைத்து இலக்கத் தகடுகளும் விநியோகிக்கப்பட்ட பின்னர், வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார். 


இன்று (09) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 


இந்த வருடம் கடந்த மார்ச் 10 ஆம் திகதியே வாகன இலக்கத் தகடுகளை விநியோகிப்பதற்கான ஒப்பம் செய்யப்பட்டது. 


அன்றைய தினம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுள்ளன. 


2023 - 2024 காலப்பகுதிக்குரிய இலக்க தகடுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதேநேரம், குறித்த காலப்பகுதிக்குரிய 32 ஆயிரம் இலக்க தகடுகள் தற்போதும் உள்ளன. 


இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்குரிய இலக்கத் தகடுகளுக்காக மேலும் ஒரு ஒப்பந்தம் எதிர்வரும் வாரத்தில் செய்துக் கொள்ளப்படவுள்ளது. 


இதன்மூலம் எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினையை நிறைவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

ஜெனீவாவில் இலங்கை முன்வைத்த கோரிக்கை


 ஒரு நாடு தேசிய வழிமுறைகள், உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றின் மூலம் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்போது, அத்தகைய நாடுகளுக்கு உரித்தான பிரத்யேகத் தீர்மானங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நம்பகமான வழியொன்றை வழங்க வேண்டும் என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார். 


ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் நிகழ்ச்சி நிரல் 2-ன் கீழான பொது விவாதத்தின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பணிமனை விடுத்துள்ள அறிக்கையின்படி, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கை செப்டம்பர் 08 ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இந்த பொது விவாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) கலந்துகொண்டார். 


உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் உரையாற்றிய நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க, ஆயுத மோதல்கள், இடப்பெயர்வு மற்றும் மனிதநேய நெருக்கடிகள் உள்ளிட்ட தீவிரமான மற்றும் அவசர மனித உரிமைச் சவால்களை சர்வதேச சமூகம் எதிர்கொண்டுள்ள இந்தத் தருணத்தில், பேரவையானது தனது பணிகளையும் வளங்களையும் மிகவும் அவசியமான உலகளாவிய சவால்களை நோக்கித் திருப்புவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 


அத்துடன், அனைத்து ஆணைகளும், குறிப்பாக நாடு சார்ந்த ஆணைகள், தெளிவாக வரையறுக்கப்பட்ட இலக்குகள் மற்றும் அளவிடக்கூடிய முடிவுகளுக்கு அமைவாக அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டினார். 


பொருத்தமான இடங்களில், நாடு சார்ந்த தீர்மானங்களில் காலாவதி சரத்துகள் மற்றும் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் ஏற்பாடுகள் வெளிப்படையாகச் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 


தேசிய வழிமுறைகள், உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றின் மூலம் ஒரு நாடு முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்போது, அது தொடர்பான ஆணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பேரவை நம்பகமான வழியை வழங்க வேண்டும் என்றும் சுமித் தசநாயக்க வலியுறுத்தினார். 


இந்த பொது விவாதத்தின் போது, அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளையும் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தைப் பாராட்டி பல நாடுகள் கருத்துத் தெரிவித்ததாக ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பணிமனை மேலும் தெரிவித்துள்ளது.

Zameera

காலாவதியான தேயிலை விற்பனை: 2 இலட்சம் ரூபாய் அபராதம்


 காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 200,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


காலாவதியான தேயிலைப் பொதியை விற்பனை செய்தமைக்காகத் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிராளி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது. 


நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 15.07.2026 அன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட 400 கிராம் எடையுள்ள தேயிலைப் பொதி ஒன்று 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 


இச்சம்பவம் தொடர்பாக 15.08.2014 திகதியிடப்பட்ட 1875/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 52 ஐ மீறியமைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 


கட்டளை இலக்கம் 52 இன் படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள் விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை எனக் கண்டறியப்பட்ட பொருட்களை, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேர்த்தோ, அதற்கு அருகிலோ அல்லது அவற்றுக்கு மத்தியிலோ வைத்திருப்பது, சேமிப்பது அல்லது திரட்டி வைப்பது கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

SHAHNI RAMEES

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (நீக்கல்) சட்டமூலம் நிறைவேற்றம்!


பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (நீக்கல்)

Zameera

வெள்ளவத்தை உணவகத்தை அகற்ற இடைக்காலத் தடை


 வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 


குறித்த உணவகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Zameera

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டொலரை கடந்தது


 சர்வதேச கச்சா எண்ணெய் விலை அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude), ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எரிபொருள் விநியோகத்தில் மேலும் தடைகளை ஏற்படுத்தும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விநியோகத் தடை குறித்த பயமே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை வேகமாகக் உயர்த்தியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.

SHAHNI RAMEES

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

 


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக

Zameera

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சிறப்புச் சான்றிதழ் வழங்கி கௌரவம்!


 மலேரியா மற்றும் தாய்மார்கள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி (Tetanus) நோய்களை வெற்றிகரமாக ஒழித்த நிலையை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணி வருவதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு சிறப்பு அதிகாரப்பூர்வ மதிப்பீட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.


 


திமோர்-லெஸ்தேயின் டிலி நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது அமர்வின் போது சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் இந்த மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


 


உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸினால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், WHO தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பதிகாரி கலாநிதி நிலேஷ் புத்தா என்பவரின் கையொப்பத்துடன் இது வெளியிடப்பட்டுள்ளது.


 


இலங்கை 2016 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் மலேரியா அற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டது. அன்றிலிருந்து 10 ஆண்டுகள் முழுவதும் நாட்டிற்குள் மலேரியா மீண்டும் பரவுவதைத் தடுத்து, அந்த நிலையைத் தொடர்ந்து பேணி வந்தமை இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது.


 


மாலத்தீவுக்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடு இலங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.


 


அத்துடன், தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி நோயை வெற்றிகரமாக ஒழித்த நிலையையும் இலங்கை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணி வந்தமை இதன்போது பாராட்டப்பட்டுள்ளது.


 


கர்ப்பிணித் தாய்மார்களுக்காக வழங்கப்படும் ரணஜன்னி தடுப்பூசி திட்டமும் நாடு முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


 


இலங்கை பெற்றுள்ள வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட ஆரம்ப சுகாதார அமைப்பு, தொடர்ச்சியான தேசிய அர்ப்பணிப்பு, உயர் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் திறமையான நோய் புலனாய்வு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் காரணமாகவே இந்த சுகாதார சாதனைகளை எட்ட முடிந்தது என்றும், அவற்றை நீண்டகாலம் பேண முடிந்தது என்றும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


 


இந்த சாதனைகள் வெறும் சுகாதார மைல்கற்கள் மட்டுமல்ல, இலங்கை மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதையும் மேலும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதையும் உறுதி செய்வதாக உலக சுகாதார அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Zameera

‘கொண்ட ரஞ்சி’ CIDக்கு அழைத்துச் செல்லப்பட்டார்


 டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி', கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


 


இன்று (09) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Zameera

இலங்கை – இந்தியா பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து


 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கைச்சாத்திடப்பட்டுள்ளன.



இந்த ஒப்பந்தங்கள் இலங்கை மற்றும் இந்திய தேசிய மாணவர் படையணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் புதுடெல்லியில் உள்ள இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான நிறுவன ரீதியான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கை விமானப்படையினால் பயன்படுத்தப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான பராமரிப்பு உதவி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.


வான் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை விமானப்படையிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள ஆறு 40 மில்லிமீற்றர் L70 வான் பாதுகாப்பு பீரங்கிகளுக்கான பராமரிப்பு உதவியை இந்தியா வழங்கவுள்ளது.


2000 முதல் 2006ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தியா இலங்கைக்கு 24 இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியிருந்ததுடன், அவற்றில் 18 அமைப்புகளுக்கு ஏற்கனவே பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளது.



இரு நாடுகளும் தங்களது நீண்டகால பாதுகாப்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்புத் துறையாக உருவெடுத்துள்ளது.


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனான சந்திப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்திப்பு “சுமுகமானதும் மிகவும் பயனுள்ளதுமானதாகவும்” அமைந்ததாகத் தெரிவித்துள்ளார்.


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையும் இந்தியாவும் “நாகரிக ரீதியாக இணைந்த இரு நாடுகள், நெருங்கிய அயல் நாடுகள் மற்றும் கடல்சார் பங்காளிகள்” எனக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இரு நாடுகளின் அபிவிருத்தி மற்றும் மக்களின் நலனுக்காக தொடர்ந்து இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.



மேலும், பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக இரு நாடுகளும் கூட்டாகச் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த விஜயம் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.


இதற்கு முன்னர் 1988ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.


ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறை உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக இராணுவப் பயிற்சி, தொழில்சார் கல்வி, உபகரணப் பராமரிப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறவுள்ளது.



இலங்கை – இந்தியா இடையிலான பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பை இந்தப் புதிய ஒப்பந்தங்கள் மேலும் வலுப்படுத்துவதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைப் பேணுவதற்கு இரு நாடுகளும் வழங்கும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.


இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

Zameera

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு நீக்கவேண்டும்


 மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு நீக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.


மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள் தொடர்பான பரிசீலனை விவாதத்தில் செவ்வாய்க்கிழமை (08) கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


பாராளுமன்றத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள் பரிசீலிக்கப்படுகின்றன.


இந்த இரண்டு ஒழுங்குவிதிகள் தொடர்பாகவும் எனது வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன்.


மிகவும் நல்ல விடயங்கள் இந்த ஒழுங்குவிதிகளில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.


இலங்கையில் சராசரியாக ஒரு வருடத்துக்கு 8,000 தொடக்கம் 10,000 வீதி விபத்துகள் நடைபெறுவதாகவும் 2,500 ற்கு மேற்பட்ட இறப்புகள் ஏற்படுவதாகவும் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இலங்கையிலே ஏற்படுகின்ற மொத்த இறப்புகளில் 2 வீதமானதாகும் என புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.


வீதி விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளில் 40 தொடக்கம் 45 வீதமானவர்கள் சிறுவர்களும் முதியோர்களுமாக இருக்கிறார்கள். மிகுதி 55 வீதமானவர்கள் நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய உழைக்கும் வர்க்கத்தினராவர்.


எனவே நாட்டினுடைய பொருளாதாரத்திலே வீதி விபத்துகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


வீதி விபத்துகளில் பாதசாரிகளும் இருசக்கர வாகனங்களிலே பயணிப்பவர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். பாதசாரிகள் கிட்டத்தட்ட 27 வீதமும், இருசக்கர வாகனத்தை பயன்படுத்துபவர்கள் 43 வீதமாகவும் உள்ளனர். அதாவது 70வீதமானவர்கள் நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வயதினராவர்.


விபத்துகளால் ஏற்பட்டுவரும் இறப்புகள் மற்றும் மிகவும் பாரதூரமான காயங்களுக்கு உட்பட்டவர்களினுடைய வைத்தியச் செலவுக்காக 2021ஆம் ஆண்டு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டிருக்கிறது.


அதாவது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் 3.1 வீதமாகும். ஆனால் அதே ஆண்டின் சுகாதாரச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியானது மொத்த தேசிய உற்பத்தியின் 4.1 வீதமாகும்.



ஆகவே நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பகுதி வீதி விபத்துடன் தொடர்புடைய விடயங்களுக்காக செலவாகின்றது.


வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எமது நாட்டிலே பொது போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பது அல்லது பொதுப் போக்குவரத்து வசதிகள் மக்களுடைய போக்கு வரத்து தேவையை ஈடுசெய்ய முடியாமல் இருப்பதே முக்கியமாக காரணமாக இருக்கிறது.


2022ஆம் ஆண்டு தரவுகளின்படி, கிட்டத்தட்ட 1,000 பேருக்கு 400 வாகனங்கள் இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.


ஆகவே, பொதுப் போக்குவரத்தை செம்மையாக்குவதன் மூலமாக வீதியில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


இவ்வருடம் முதல் எட்டு மாதங்களில் இதுவரை 1,600 இறப்புகள் வீதிவிபத்துக்களால் ஏற்பட்டிருக்கின்றது. இவ் எண்ணிக்கை டெங்கு நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 30 வீதம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.


ஆகவே, இந்த விடயங்களை உன்னிப்பாக அவதானித்து, சட்டத்திருத்தங்களை செய்வது மிகவும் அவசியமான ஒரு தேவையாக இருக்கிறது.


ஆசனப்பட்டி அணிவது சட்டத்திருத்தத்தினூடாக ஏற்கனவே கட்டாயமாக்கப்படுள்ளது. இருந்தபோதும் வாகன உரிமையாளர்கள் தம்மை தயார்ப்படுத்துவதற்காக கால அவகாசம் வளங்கப்பட்டிருந்தாலும் இம்மாதம் 19ஆம் திகதியுடன் அக்கால அவகாசம் நிறைவுபெறுகிறது.


அதிவேக நெடுஞ்சாலைகளிலே பயணிக்கின்ற அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


ஆனால் சென்ற வாரம் நான் வவுனியாவிலிருந்து பேரூந்தில் வரும்போது அதிவேக நெடுஞ்சாலையிலே பயணிக்கின்ற பேரூந்தில் சட்டத்திற்கு மாறாக பயணிகளின் உயிரை மதிக்காது நின்றுவரும் பயணிகளை (Standing Passengers) கொண்டுவருகிறார்கள். நாங்கள் ஆசனத்திலே இருக்கிறவர்கள் பட்டி அணிய வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதிவேக நெடுஞ்சாலையிலே நின்று பிரயாணம் செய்யும் பயணிகளின் நிலை என்ன? இவ்விடயத்தில் உரிய கவனத்தை கோருகிறேன்.


இந்த நிலைமை மாற வேண்டும் சட்டத்தை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இன்னுமொரு முக்கிய விடயத்தை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.


இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப் பத்திரம் எவ்வாறு வழங்கப்படுகிறது?


வாகன போக்குவரத்து நடக்காத இடத்தில் இருசக்கர வாகனத்தில் எட்டு போட்டு காட்டினால் அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது, வீதியில் ஓடிக்காட்ட தேவையில்லை. எட்டு போட்டு காட்டிவிட்டு வீதிக்கு வருபவர்கள் வீதியில் வாகனம் செலுத்தும் அனுபவமின்மையால் விபத்துகளில் பாதிக்கப்படுகிறார்கள்.


இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வீதிகளிலே பயணித்து பயிற்சி பெறுவார்களேயானால் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கான ஏதுநிலை ஏற்படலாம்.


அவ்வாறே உழவு இயந்திரங்கள் மற்றும் லாண்ட்மாஸ்ரர்களின் பின்புறத்தில் இரவில் ஒளிரும் பட்டிகள் பொருத்தப்படல் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.


அவ்வாறு செய்வதால் இரவு நேரத்திலே ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்கலாம்.



கெளரவ சபைக்கு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே


ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைப் பேரவையின் 63வது கூட்டத்தொடர் நேற்றுத் ஆரம்பமாகியிருக்கிறது. இக்கூட்டத்தொடர் அடுத்த ஏழாம் திகதி வரை ஜெனீவாவிலே நடைபெறுகிறது.


இலங்கை தொடர்பான முன்னோட்ட அறிக்கையில் இலங்கையில் நிகழ்ந்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளது, அந்த அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.South Asians & Diaspora


அந்த அறிக்கையிலே மேற்படிவிடயங்கள் தொடர்பாக அரசாங்கத்தால் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளில் முன்னேற்றமின்மை தொடரும் கெடுபிடிகள் தொடர்பாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்காமைக்கு எங்கள் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல் நடத்துவது போன்ற பல விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் அக்கறையின்றி இருக்கின்றது.


ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் விஞ்ஞாபனங்களிலே, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக மேற்படி விடயங்களுக்கு தீர்வு காண்போம் என உத்தரவாதம் கொடுத்திருக்கிறீர்கள்.Politics


ஆகவே, உங்களுடைய தேர்தல் அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டிய பாரிய பொறுப்பு உங்களுக்கிருக்கிறது. அந்த வகையிலே நீங்கள் இந்த விடயங்களிலே கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டு, இந்த விடயங்களிலே நீங்கள் கவனம் செலுத்தாமையையிட்டு என்னுடைய அதிருப்தியை இந்தச் சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


அதேபோல, நீங்கள் நாளை கொண்டுவருகின்ற ஒரு சட்டமூலம் தொடர்பாகவும் குறிப்பிட விரும்புகிறேன்.


அதாவது “பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமை அதிகாரி சட்டமூலம்” முப்படைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும்.



வியாழக்கிழமை (10) பாராளுமன்றத்திலே அதை நீக்குவதற்காக சட்டமூலம் கொண்டு வருகிறீர்கள். அதையும் நாங்கள் வரவேற்கிறோம்.


அந்தச் சட்டம் எங்களுக்குத் தேவை இல்லாத ஒரு சட்டம். ஏன் நீங்கள் அந்தச் சட்டமூலத்தை இல்லாமல் செய்கிறீர்கள் என்பதற்கு உங்களாலே கொடுக்கப்பட்ட விளக்கம் யாதெனில், பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைத்து எங்களுடைய நாட்டினுடைய ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக என சொல்லப்படுகிறது.


ஆனால், நிதி மாத்திரம் அல்ல எமது முக்கியமான பிரச்சனை. எங்களுடைய நாட்டினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தச் சட்டமூலம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன்.


அதாவது, எங்களுடைய நாட்டினுடைய பொதுப் பாதுகாப்பு இப்போது சீராக இருக்கிறது என்ற கருதுகோளின் அடிப்படையில்தான் இந்தப் பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமை அதிகாரி என்ற பதவியையும் அந்த அலுவலகத்தையும் நீக்குவதற்கு முன்வந்திருக்கிறீர்கள், மிகவும் நல்ல விடயம்.


அப்படியாக இந்த நாட்டினுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால், நீங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலே குறிப்பிட்ட பயங்கரவாதத் தடைச்சட்டதை ஏன் நீக்கமுடியாது? மிகவும் மோசமான மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்வதற்கு உறுதுணையாக இருக்கின்ற இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கல் முக்கியமானதாகும்.


ஆகவே, நீங்கள் இந்தப் பிரதானியை நீக்குவது மாத்திரம் இல்லை. எங்களுடைய நாட்டினுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கருதுகின்ற நீங்கள், தயவுசெய்து இந்த மிகவும் மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கிறேன்.


அதேவேளை ஊழல் ஒழிப்பு, நிதி துஷ்பிரயோகம் மற்றும் போதைவஸ்த்து பாவனை ஆகியவற்றுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம்.


எமது முன்னோர் கர்மவினை பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன்.


பல ஆயிரம் தாய்மார்களின் கண்களில் வந்த கண்நீர் இன்று முக்கியமான ஒரு சிலரின் கண்ணிலே வருவதை காணக்கூடியதாக உள்ளது.


ஆனால் அதைப்பற்றி நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. ஆம் எங்களுக்கு அதிலே சந்தோஷம் இல்லை.


ஆனால், தனக்கு தனக்கென்று ஒரு விடயம் நடக்கும்போது, அவர்களுக்கு மனதில் மனசாட்சி உறுத்தவேண்டும்.



எங்களாலே எத்தனை பேருடைய கண்களிலே கண்ணீர் வந்தது, அந்தக் கர்மா எங்களுக்கும் அந்த துர்ப்பாக்கிய நிலையை தந்திருக்கிறது என மனம்வருந்தி திருந்த வேண்டும்.


ஆகவே, இன்றைய சட்டமூலத்திலே குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயங்களுக்கு எங்களுடைய ஆதரவு நிச்சயமாக இருக்கும்.


இந்த நாட்டின் பொருளாதாரத்திலே பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வீதி விபத்துகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.


எமது மாகாணத்தின் வீதிகளிலே மிகவும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. ஆனால்,


அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை மூன்று விபத்து மற்றும் அவசர சிகிச்சை (Accident and Emergency) வசதிகள்தான் இருக்கின்றன. அதாவது மூன்று விபத்துச் சேவைப் பிரிவுகள் இருக்கின்றன.


முல்லைத்தீவு மாவட்டத்திலே மாங்குளத்திலே ஒரு (Rehabilitation Hospital), புனர்வாழ்வு வைத்தியசாலை


அமைக்கப்பட்டிருக்கிறது.


வீதி விபத்துகளிலே காயமடைகின்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், புனர்வாழ்வு அளிப்பதற்கும் முக்கியமான ஒரு நிலையமாக அது இருக்கின்றது.


ஆனால், இன்று அந்த நிலையத்திலே ஆளணி பற்றாக்குறை என்பது மிகவும் மோசமாக இருக்கிறது.


வடக்கு மாகாணத்திலே இருக்கிற ஐந்து பிரதான வைத்தியசாலைகளிலே, வவுனியா வைத்தியசாலையிலும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலும் மட்டும்தான் விபத்துச் சேவைப் பிரிவுகள் இருக்கின்றன.


முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலே விபத்துச் சேவைப் பிரிவுகள் இல்லை.


ஆகவே, வீதி விபத்துகளால் நாட்டுக்கு ஏற்படுகின்ற பொருளாதார நட்டத்தையும் உயிரிழப்புகளையும் குறைக்க வேண்டும் என்றால், சுகாதாரச் சேவையிலே பாரிய முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது.


நான் கூறிய மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி வைத்தியசாலைகளிலே எதிர்வரும் காலத்திலாவது விபத்துச் சேவைப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்.


அதேபோல, எங்களுடைய வவுனியா வைத்தியசாலையிலே விபத்துச் சேவைப் பிரிவு இருந்தாலும் கூட இன்று அங்கு ஒரே ஒரு மயக்கவியல் நிபுணர்தான் இருக்கிறார்.


பல்வேறு தரப்பினரும் பாவிக்கும் மிகப்பெரிய வைத்தியசாலையில் ஒரே ஒரு மயக்கவியல் நிபுணர்தான் இருக்கிறார்.


அங்கிருக்கின்ற CT Scan மிகவும் பழமையானது.


ஆகவே, விபத்துகளைக் குறைப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் மேற்கூறிய விடயங்களிலே இந்தச் சபை கவனம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Zameera

இலங்கை எந்தவொரு நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் இலங்கையின் பக்கத்தில் உறுதியாகத் துணை நிற்கும்


 “இலங்கை தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும்” என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள்



அவர் தனது முதலாவது இலங்கைக்கான விஜயத்தின் போது செவ்வாய்க்கிழமை (08) கொழும்பில் இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.


இந்தியாவின் வேகமான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்த பாதுகாப்புத் துறை அமைச்சர், உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.


2014ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் அது இரட்டிப்பாகி தற்போது சுமார் 4 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.


உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், கடந்த 12 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் சுமார் 4.7 சதவீதமாக இருந்ததாகவும், அதற்கு முந்தைய காலகட்டத்தில் அது 10–11 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.


2014ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.45 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் அது ரூ.79 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


மின்னணுப் பொருட்கள் மற்றும் கைப்பேசி உற்பத்தித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் அவர் சுட்டிக்காட்டினார்.



மின்னணுப் பொருட்களின் உற்பத்தி ரூ.1.9 லட்சம் கோடியிலிருந்து ரூ.11 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அவற்றின் ஏற்றுமதி சுமார் ரூ.38,000 கோடியிலிருந்து ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்து, 700 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


“இந்தியா தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய கைப்பேசி உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. 2014ஆம் ஆண்டில் வெறும் இரண்டு உற்பத்தி அலகுகள் மட்டுமே இருந்த நிலையில், இன்று அவற்றின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாகியுள்ளது.


கைப்பேசி உற்பத்தி ரூ.18,000 கோடியிலிருந்து ரூ.5.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கைப்பேசி ஏற்றுமதி கிட்டத்தட்ட 163 மடங்கு அதிகரித்து ரூ.2.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், வாகன ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் ரூ.50,000 கோடியிலிருந்து ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.


கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 38 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளதாகவும், இதில் எட்டு முக்கிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) இடம்பெற்றுள்ளதாகவும் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


2014ஆம் ஆண்டுக்கு முன்பு இதுபோன்ற நான்கு ஒப்பந்தங்கள் மட்டுமே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.


இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை “அனைத்து ஒப்பந்தங்களிலும் மிகப்பெரிய ஒப்பந்தம்” (Mother of All Deals) என்று குறிப்பிட்ட அவர், இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான அணுகலை இந்தியாவுக்கு வழங்குவதாகவும், இந்தியாவின் வளர்ந்து வரும் தூதரக மற்றும் பொருளாதார திறன்களை இது பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.


இந்தியாவின் உலகளாவிய நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்து குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்ததற்கு பிரதமர்  நரேந்திர மோடியின் தலைமையே முக்கிய காரணம் என  ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


12 ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில், இன்று சர்வதேச அரங்கில் இந்தியா பேசும்போது உலக நாடுகள் அதை கவனித்துக் கேட்கின்றன என்று அவர் கூறினார்.


மேலும், இரு நாடுகளின் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் இந்திய வம்சாவளியினரை அவர் பாராட்டினார்.


இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.



12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வெறும் ரூ.600 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை மட்டுமே ஏற்றுமதி செய்ததாகவும், தற்போது அது வரலாறு காணாத அளவான சுமார் ரூ.39,000 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


2013-14 நிதியாண்டில் சுமார் ரூ.2 லட்சம் கோடியாக இருந்த பாதுகாப்பு பட்ஜெட், 2025-26 நிதியாண்டில் ரூ.7.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


இந்த வளர்ச்சி இந்தியாவின் விரிவடைந்து வரும் திறன்களையும், வலுவான மற்றும் தற்சார்பு (ஆத்மநிர்பர்) பாதுகாப்புத் துறையை உருவாக்கும் தொடர்ச்சியான பயணத்தையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.


இந்தியா தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய தொடக்க நிறுவன (Startup) சூழலமைப்பைக் கொண்டுள்ளதாகவும், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும்  ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


இது இந்திய இளைஞர்களின் புதுமைச் சிந்தனையையும் தொழில்முனைவுத் துணிச்சலையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.


வரி விதிப்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களை விளக்கிய அவர், சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் “ஒரே நாடு, ஒரே வரி” என்ற நடைமுறை உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.


மேலும், தனிநபர் வரி செலுத்துவோருக்கான வரிச்சலுகை நடவடிக்கைகள் அவர்களின் வரிச்சுமையைக் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


பொருளாதார வளர்ச்சியின் மூலம் பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தையும் திரு. ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.


சுமார் 25 கோடி இந்தியர்கள் வறுமையின் சுழற்சியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வறுமை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் விரிவாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


2014ஆம் ஆண்டில் சுமார் 25 கோடி மக்களை மட்டுமே சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் சென்றடைந்த நிலையில், தற்போது சுமார் 95 கோடி இந்தியர்கள் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் கீழ் உள்ளதாக அவர் தெரிவித்தார்.



டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் மாற்றத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். பிராட்பேண்ட் இணைப்பின் விரைவான விரிவாக்கம் மற்றும் UPI-யின் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.


நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் பிற போக்குவரத்து வலையமைப்புகளின் விரிவாக்கம் உள்ளிட்ட இந்தியாவின் வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.


இந்திய ரயில்வே 100 சதவீத மின்மயமாக்கல் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.


மேலும், JAM (Jan Dhan–Aadhaar–Mobile) வலையமைப்பு மற்றும் நேரடி நிதிப் பரிமாற்றம் (DBT) ஆகியவை அரசின் நலத்திட்டப் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.


DBT மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை ரூ.51 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் இலங்கை அரசின் அமைச்சரவை அமைச்சர்  சரோஜா சாவித்திரி போல்ராஜ், மேற்கு மாகாண ஆளுநர் ஹனிப் யூசூப், இலங்கை அரசின் பிரதி அமைச்சர் . சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா, இந்தியாவின் சிரேஷ்ட சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய சமூகத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Zameera

எல்நினோ தாக்கம்: 8 மாவட்டங்கள் பாதிப்பு


 எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.


 


அந்த 8 மாவட்டங்களிலுள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.


 


அத்துடன், 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154,167 நபர்கள் இந்த எல்நினோ சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


 


இந்தத் தாக்கம் காரணமாக 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


இதற்கமைய 40,945 குடும்பங்களைச் சேர்ந்த 132,748 நபர்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.


 


இதில் அதிகளவாக மொனராகலை மாவட்டத்திற்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளடன், அங்கு 08 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 13,139 குடும்பங்களின் 42,429 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் 08 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 பேருக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 


அம்பாறை மாவட்டத்தின் 03 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 3,794 குடும்பங்களைச் சேர்ந்த 12,047 பேருக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.