
Sunday, October 4, 2026

முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் வாய்ப்பு.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைவதற்குள் காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) முன் ஆஜராகத் தவறினால், அவருக்கு எதிராகப் பயணத் தடை கோரப்படும் எனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதற்காக நாட்டை விட்டுச் சென்றிருந்த ஷிராந்தி ராஜபக்ச, தான் தலைமை தாங்கிய ‘சிறிலியா’ (Siriliya) நிறுவனம் தொடர்பாகக் காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு 14 நாள் அவகாசம் கோரியிருந்தார். அவர் உரிய காலத்தில் ஆஜராகத் தவறினால், காவற்துறையினர் உடனடியாகப் பயணத் தடை கோருவார்கள் என அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டன. இதனால் அவர் விமான நிலையத்தை வந்தடைந்ததும் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவாகலாம்.
ஷிராந்தி ராஜபக்ச கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்தார். செப்டம்பர் 24ஆம் திகதி காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்து, விமான நிலையத்தில் வைத்து அவருக்குரிய அறிவித்தல் காவற்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
எனினும், அவர் நாடு திரும்புவதற்கான உத்தேசத் திகதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் ஷிராந்தி ராஜபக்ச மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளமையால், அவரது மீள் வருகைத் திகதியானது மருத்துவத் தேவைகளைப் பொறுத்தே அமையும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

களுத்தரையில் கைதான ஞானசார தேரர் CCD க்கு அழைத்து வரப்பட்டார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய, அவர் நேற்று (03) களுத்துறை, தீனியாவள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை அண்மையில் உயர்நீதிமன்றம் இரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல மாகாணங்களில் 75 mm க்கும் அதிக மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் பட்டியல் வெளியீடு
மத்திய, சபரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, October 3, 2026
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரிக்கக்கூடும்
சோள இறக்குமதிக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.கலாச்சாரம் காண்
விலங்கு உணவிற்காக சோளத்திற்குப் பதிலாக அரிசியைப் மாற்றுப் பொருளாகப் பயன்படுத்துவதால், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், கடுமையான சோளப் பற்றாக்குறை காரணமாகச் சிறு அளவிலான கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களில் சுமார் 20 சதவீதத்தினர் தொழிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : விரிவுரையாளருக்கு விளக்கமறியல்
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 55 வயதுடைய விரிவுரையாளரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான விரிவுரையாளர் வெள்ளிக்கிழமை (02) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், மனுதாரர் மற்றும் எதிராளித் தரப்பினரின் வாதப் பிரதிவாதங்களைச் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் குறித்த 55 வயதுடைய நபர், மாணவிகளின் பாடப் பரீட்சைகளுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்துவந்துள்ளார்.
இதன் காரணமாக, தாம் இது குறித்து வெளியில் முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்வி வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக அமைதி காத்து வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இச் சம்பவம் தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரிய பயிற்சி மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினரால் கடந்த வியாழக்கிழமை (01) சந்தேகநபரான விரிவுரையாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தலின் பேரிலும் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு விளக்கமறியல்
மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நிலையிலேயே அவர் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சான்றுகளையும் கருத்துக்களையும் பரிசீலித்த கொழும்பு மேலதிக தலைமை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவின் சிறைத்தண்டனையைக் குறைப்பதற்காக, அவரது மனைவி இலஞ்சம் வழங்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இலஞ்சக் குற்றச்சாட்டுக்குத் தூண்டுதலாகவும் உடந்தையாகவும் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்த நோயாளி உறுப்புகள் தானம்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
தமது உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேய எண்ணத்துடன், நோயாளியின் குடும்பத்தினர் இந்த உறுப்பு தானத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர்.
இந்த மகத்தான முடிவு, பல உயிர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் வாழ்வதற்கான வாய்ப்பையும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆஷாத் எம். கனீபா தெரிவித்துள்ளார்.
தானமாகப் பெறப்பட்ட இரு சிறுநீரகங்களும், நீண்டகாலமாகச் சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு வாழ்வளிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, நேற்று (2) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
"உறுப்பு தானம் என்பது பல உயிர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதமான கொடையாகும். மன்னாரில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சமூகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உதவும்" என வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த மனிதநேயச் செயலுக்குச் சம்மதித்த நோயாளியின் குடும்பத்தினருக்கும், வைத்திய நிபுணர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், சத்திர சிகிச்சை மேற்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்துச் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற ரீதியில் அவர் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இது அவ்வைத்தியசாலையின் எலும்பியல் சத்திரசிகிச்சை சேவையின் வளர்ச்சியில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது என்றும் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை மருத்துவ நிபுணர் விமலராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இவ் வெற்றிகரமான சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
இச்சத்திரசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த சத்திரசிகிச்சைக் குழுவினர் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் வைத்தியசாலை நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
மேலும், வைத்தியசாலையின் மருத்துவச் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கிவரும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு வைத்தியசாலை தரப்பில் இருந்து சிறப்பு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிரான்சில் வன்முறையாக மாறிய மாணவர் போராட்டம் : 2,000 பேர் கைது
பிரான்சில் பாடசாலைகளின் நிலைமையை மேம்படுத்தக் கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், போராட்டங்கள் ஆரம்பித்ததிலிருந்து சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் பிராந்தியத்தில் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் ஆரம்பமான இந்தப் போராட்டங்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளன.
ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிகளவான மாணவர்கள், பழுதடைந்த பாடசாலைக் கட்டிடங்கள், போதிய கற்றல் உபகரணங்கள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (2) பிரான்ஸ் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. சில பகுதிகளில் போராட்டங்கள் தீவைப்பு, சொத்துச் சேதம் மற்றும் பொலிஸாருடனான மோதல்களாக மாறியுள்ளன.
இதேவேளை, அண்டை நாடான பெல்ஜியத்திலும் மாணவர் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள் ஆரம்பித்ததிலிருந்து சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உண்மையில் உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள்தானா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், தீவிர இடதுசாரி அரசியல் குழுக்கள் போராட்டங்களை ஊக்குவிப்பதாக அல்லது பயன்படுத்திக் கொள்வதாக பிரான்ஸ் அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், மாணவர் தலைவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளே போராட்டங்களுக்கான காரணம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகமான ஆசிரியர்களை நியமித்தல், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பழுதடைந்த பாடசாலைக் கட்டிடங்களை புனரமைத்தல், வகுப்பறை நெரிசலைக் குறைத்தல் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர் அமைப்புகள் முன்வைத்துள்ளன.
பிரான்சின் கல்வி அமைப்பில் அண்மைய காலத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய நெருக்கடிகளில் ஒன்றாக இந்தப் போராட்டங்கள் உருவெடுத்துள்ள நிலையில், மாணவர் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் நிலைமையைத் தணிப்பதற்கான அழுத்தம் அதிகரித்துள்ளது.
இரு மேல் நீதிமன்ற நீதிபதிகளை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்க ஒப்புதல்
மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்புப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, இரு நீதிபதிகளையும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

