Our Feeds


Thursday, November 19, 2026

ShortNews

கல்முனை, சாய்ந்தமருது சபைகளுக்கான தேர்தலுக்கு தயார் - நிசாம் காரியப்பர் சவால்!


கல்முனை மாநகர சபை - சாய்ந்தமருது நகரசபை தொடர்பில்  எல்லை நிர்ணய குழு ஒன்று தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்துக்குள் எல்லை நிர்ணய  பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித காலவரையறையும் குறிப்பிடப்படவில்லை. இதுபாரியதொரு குறைப்பாடாகும். கல்முனை மாநகர சபை மற்றும் சாந்தமருது நகர சபை தேர்தலுக்கு நாங்கள் தயார், அரசாங்கம் தயாரா என  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள்  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வரவு செலவுத் திட்ட முன்மொழிவானது மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணாகதியாகின்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஏகாதிபத்திய வெளிநாட்டு கொள்கைகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவது மட்டுமன்றி மத்திய கிழக்கில் நீண்ட காலமாக இலங்கைக்கு உதவி வந்த ஈரான் போன்ற நட்பு நாடுகளின் நலன்களை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம் என்பதனை மறந்துவிடக் கூடாது.

அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களுக்கு அடிபணிந்து இஸ்ரேலின் சியோனிச அரசியல் மற்றும் இராணுவ நோக்கத்திற்கு சாதமான நிலைப்பாட்டை இலங்கை எடுக்குமாக இருந்தால் அது எமது நீண்டகால அணிசேரா கொள்கை மற்றும் சுயாதீன வெளிநாட்டு கொள்கைக்கும் முரணாக அமையும். அத்துடன் இத்தகைய நிலைப்பாடு அண்டைய நாடான இந்தியாவுடனான பிராந்திய தொடர்புகளுக்கும் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். இலங்கையின் பொருளாதார வர்த்தகத்தையும் பாதிக்கும். பல துறைகளில் இதன் தாக்கம் ஏற்படுத்தலாம்.

இந்த பாவச் செயலுக்கு நாமும் பங்காளிகள் ஆகின்றோம். ஒரு வல்லரசின் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை துணை போவது சர்வதேச சட்டங்களுக்கும் முரணான இராணுவ நடவடிக்கைக்கு இலங்கை நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் என்பதுடன், சர்வதேச சட்ட பொறுப்பு கூறலுக்கும் கேள்விகளுக்கு நாங்கள் உள்ளாகலாம். எனவே இலங்கை எந்தவொரு வல்லரசுக்கும் அடிபணியாமல் வெளிநாட்டு கொள்கை, சர்வதேச சட்ட கோட்பாடுகளுக்குள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கல்முனை நகரில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் குறைந்தபட்சம் 65,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் '15 நகரங்கள் அபிவிருத்தித் திட்டத்தின்' கீழ் கல்முனைப் பகுதிக்கு வெறும் 5,000 மில்லியன் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்முனை மக்களுக்கு இது பாரியதொரு அநீதியாகும். அரசாங்கத்தின் மீதான முஸ்லிம் மக்களின் நம்பிக்கை முற்றாகச் சிதைந்துவிட்டது. இது பற்றி அரசாங்கத்திற்கு எவ்வித கவலையும் கிடையாது. ஆனால், இதன் உண்மையான பிரதிபலனை அரசாங்கம் வெகு விரைவில் எதிர்கொள்ள நேரிடும்.

வெகு விரைவில் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், அரசாங்கம் தயாராக உள்ளதா? சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பதைப் பற்றி ஆராய வேண்டும். 2026 ஆம் ஆண்டுக்கான வர்த்தமானியின் பிரகாரம் அறிவிக்கப்பட்ட சாய்ந்தமருது நகரசபை தற்போது சட்ட ரீதியாக உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகிச் சுமார் ஆறு மாதங்கள் கடந்ததன் பின்னர், பொதுநிர்வாக அமைச்சு அது தொடர்பில் மூன்று வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாக எல்லை நிர்ணயக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதனைச் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதமே அறிவித்திருந்தது. தற்போது வர்த்தமானி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ள போதிலும்,அதில் பாரிய ஒரு தவறு இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்குள் எல்லை நிர்ணய நடவடிக்கை நிறைவேற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், வர்த்தமானியில் அவ்வாறான கால வரையறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உயர்நீதிமன்ற  உத்தரவுக்கு அமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் எல்லை நிர்ணயக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், சாய்ந்தமருது நகர சபைக்கான தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், அரசாங்கம் இதற்கு எந்த அளவில் தயாராக உள்ளது? சாய்ந்தமருதில் புதிதாக உருவாக்கப்பட வேண்டிய நகர சபைக்கு அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பதைக் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே, தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மட்டுமே அரசாங்கத்தின் உண்மையான நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். நாங்கள் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைத் தேர்தல்களுக்குத் தயாராக உள்ளோம், அரசாங்கம் தயாராக உள்ளதா? தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தின்  நிலை எதுவென்பதை தெரிந்துக் கொள்ளலாம் என்றார்.

ShortNews

மட்டக்களப்பில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை!


ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரை கடத்திக் கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், 8 பேருக்கு மரண தண்டனை விதித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் , 9ஆவது பிரதிவாதியை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (19) வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரை அப்போதைய செங்கலடி முகாமில் இருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை (EPDP) சேர்ந்தவர்கள் வானில் கடத்திச் சென்று கொலை செய்து புதைத்து, அதன் மீது வாழைமரத்தை நட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் 9 பேரைக் கைது செய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

நீதவான் நீதிமன்ற விசாரணையின் பின்னர், இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மீட்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

வழக்கில் ரவி என அழைக்கப்படும் தர்மலிங்கம் இளமாரன், வீரக்குட்டி சேகர், விஜய் என அழைக்கப்படும் மகேந்திரராஜா வினோராஜ், ஜெக்கா என அழைக்கப்படும் யோகராசா ஜெயக்குமார், சிறி என அழைக்கப்படும் சிறிஸ்கந்தராஜா நாகநாதன், சிவா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகராசா, அருள் என அழைக்கப்படும் அருணாச்சலம் ராமச்சந்திரன் மற்றும் விஜி என அழைக்கப்படும் கோவிந்தன் பிரதீபன் ஆகிய 8 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தீர்ப்பு வழங்கப்பட்டபோது, வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்படி, முதலாவது குற்றச்சாட்டான மரணத்தை விளைவிக்கும் பொது நோக்கத்துடன் கூடிய சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருந்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 140இன் கீழ் 6 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டான பொது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருந்து ஆட்கொலை செய்தமைக்காக தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 296-இன் கீழ் மரண தண்டனையும், மூன்றாவது குற்றச்சாட்டான தேவதாஸ் சுரேஷ்குமாரின் மரணத்தை விளைவித்து ஆட்கொலை செய்தமைக்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

9ஆவது பிரதிவாதியை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரும் உடனடியாக நீதிமன்றத்திலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ShortNews

“வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இதுவரை நாம் சம்பள உயர்வை வழங்கவில்லை" - அமைச்சர் லால் காந்த ஒப்புதல்!


வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை – லால் காந்த ஒப்புதல்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அரசாங்கம் இதுவரை சம்பள உயர்வை வழங்கவில்லை என்றும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் அவ்வாறான சம்பளத் திருத்தம் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.


இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் லால் காந்த, அடுத்த தேசிய வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டார்.


“வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இதுவரை நாம் சம்பள உயர்வை வழங்கவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்திலும் அவ்வாறான சம்பள உயர்வு எதுவும் முன்மொழியப்படவில்லை. அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வுகளை வழங்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சில பிரச்சினைகளுக்கு அமைச்சு மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் அல்லது சம்பள நிர்ணய சபை போன்ற பொறிமுறைகள் ஊடாகத் தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.


தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவற்றுக்கு உரிமை இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.


“போராட்டங்களை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. அது அவர்களுடைய உரிமை. அந்த உரிமையை அவர்கள் பயன்படுத்த வேண்டும்” என அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.


மேலும், தமது உறுப்பினர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தொழிற்சங்கங்களுக்கு இருப்பதாகவும், தொழிலாளர்களின் குறைபாடுகளுக்குத் தீர்வு காணாமல் தொழிற்சங்கங்களால் தமது செயற்பாடுகளைத் திறம்பட முன்னெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


தனது கடந்தகால தொழிற்சங்கச் செயற்பாடுகள் குறித்த அனுபவத்தையும் நினைவுகூர்ந்த அமைச்சர், இத்தகைய நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைத் தாம் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.


“கடந்த காலங்களில் நாமும் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள். இதனை நாம் புரிந்துகொண்டுள்ளோம். அரச சேவையில் உள்ளவர்களும் இதனைப் புரிந்துகொண்டுள்ளனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Zameera

2008ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: EPDP உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை!

 

யுத்த காலத்தில், 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட EPDP அமைப்பைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.




நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இந்தக் கொலை வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




2008 ஜூன் 19ஆம் திகதி செங்கலடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வர்த்தகரான தேவதாசன் சுரேஷ்குமார் என்பவர் வெள்ளை வானில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டதாக அக்காலத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.




பின்னர் ஜூலை 17ஆம் திகதி மட்டக்களப்பில் EPDP அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக அக்கால ஊடகச் செய்திகள் தெரிவித்திருந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.


ShortNews

இம்ரான்கான் அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்துள்ளது!


தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் முன்னாள் பிரதமர் கௌரவ இம்ரான்கான் அவர்களுக்கு மனிதாபிமான கவலைகளை முன்னிறுத்தியும், இலங்கை அவருக்கு ஆதரவை நல்கும் பொருட்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்துள்ளது.

ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதால், சனிக்கிழமை (21) இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி பிரதான எதிர்க்கட்சி இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்துள்ளது.

இம்ரான் கானுக்கு போதுமான மற்றும் சுயாதீனமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியும்,

அவரது விடுதலை, உரிய நடைமுறை மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப பிற பொருத்தமான நிவாரணங்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் உறுதி செய்வதும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிகெட் நட்சத்திரமும், தஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஸ்தாபகருமான இம்ரான் கானுக்கு ஆதரவாகப் பாகிஸ்தானிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு அரசியல், மனிதாபிமான மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த ஆதரவுக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் பின்னனியிலேயே இலங்கை பாராளுமன்றத்திலும் பிரதான எதிர்க்கட்சி இந்த பிரேரணையைக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ShortNews

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்திருக்கும் விசேட அறிவிப்பு!


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகத்தின் அனைத்துச் சேவைகளையும் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் (Appointment) முறையின் கீழ் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ அறிவித்துள்ளார். அது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது .....




23 ஆம் திகதி முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் அனைத்துப் பொதுமக்கள் சேவைகளையும் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் முறையின் கீழே பெற்றுக் கொள்ளலாம்.




பொதுமக்களின் வசதி கருதி 2026.11.23 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த தினசரி முன்பதிவு வாய்ப்புகளின் எண்ணிக்கையைத் தற்போது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்துவதற்குத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.




அதற்கமைய முன்னரை விட அதிகளவான சேவை பெறுநர்களுக்குத் தினசரி விரைவாகவும் இலகுவாகவும் தமது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.  




சேவை பெறுநர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒரு முறையின் ஊடாகத் தமக்கு வசதியான நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ள முடியும்:  




தொலைபேசி ஊடாக: 011 2 117 116 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம்.மேலும் இணையத்தளம் ஊடாக: https://dmtappointments.dmt.gov.lk எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம். 




ஆகையால், 23 ஆம் திகதி முதல் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலக வளாகத்திற்கு அருகில் அதிகாலை முதலே தேவையற்ற விதத்தில் வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும்,




சேவை பெறுநர்களின் வசதி மற்றும் நேரத்தைச் சேமிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் முறையை மாத்திரம் பின்பற்றிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ShortNews

79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட விழா சுதந்திர சதுக்கத்தில்!


79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட விழா தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், இம்முறை சுதந்திர தின விழாவின் தொனிப்பொருள், ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள், நிகழ்ச்சி நிரல், சமய நிகழ்வுகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர்களான ஹினிதும சுனில் செனெவி, வசந்த சமரசிங்க, சந்தன அபேரத்ன, சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரும், நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, வலுசக்தி அமைச்சு, மேல் மாகாண சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ShortNews

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை நாம் நன்கறிவோம் - அமைச்சர் சந்தன அபயரத்ன!


ஈஸ்டர் பயங்கரவாதத் குண்டுத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என எங்களுக்குத் நன்கு தெரியும் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

ஈஸ்டர் பயங்கரவாதத் குண்டுத் தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் தவறான கூற்றுக்களை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் பயங்கரவாதத் குண்டுத் தாக்குதல் தொடர்பில் எவரும் பொய்யான கருத்துக்களை சொல்லக் கூடாது.

இதன் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து எமக்குத் தெளிவான புரிதல் உள்ளது.

உதய கம்மன்பில ஈஸ்டர் பயங்கரவாதத் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்பான நூலொன்றை வெளியிட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் அதில் கலந்துகொண்டு அக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தினார்.

எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயற்சித்தாலும் உண்மையை மறைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை.

ShortNews

40,000 புனித குர்ஆன் பிரதிகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை! - உதுமாலெப்பை MP யின் கேள்விக்கு அமைச்சர் பதில்!


தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் 40,000 ஆயிரம் புனித குர்ஆன் பிரதிகளையும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளையும் நீக்குவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு முஸ்லிம் சமூகம் வாக்களிக்கவில்லை என்பதற்காகவே கொரோனா தொற்றால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்ததுடன் முஸ்லிம்களுக்கான புனித குர்ஆன் 40,000 ஆயிரம் பிரதிகளை தடை செய்து முஸ்லிம் கலாசார திணைக்களத்திடம் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் செய்துள்ள 83 அறபுக்கல்லூரிகளின் பதிவுகளையும் தடை செய்தார்.

ஆனால் முஸ்லிம் சமூகம் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி ஆனால் தடைசெய்யப்பட்டுள்ள புனித குர்ஆன்களையும், 83 அறபுக்கல்லூரிகளின் தடைகளையும் நீக்குவார் என எதிர்பார்த்து 02 வருடங்கள் சென்ற நிலையிலும் தங்களின் புனிதமான 40,000 குர்ஆன் பிரதிகளும், 83 அறபுக்கல்லூரிகளின் பதிவுகளுக்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை என எமது முஸ்லிம் சமூகம் மிகவும் கவலையடைந்திருக்கின்றது.

அமைச்சர் சுனில் செனவி சகல இனங்கள் மத்தியிலும் நீதி நியாயமாக செயற்பட்டு வருவது குறித்து நாங்கள் அவரை பாராட்டுகிறோம். எமது முஸ்லிம் மக்களின் புனித குர்ஆன்களையும், 83 அரபுக் கல்லூரிகளின் தடைகளையும் நீக்குவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பில் எமது முஸ்லிம் சமூகத்தின் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் ஜம்மிய்யத்துல் உலமா, சூரா சபை, முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் அமைப்பினர் என முழு சமூகமும் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் பிரதி அமைச்சரிடமும் பல தடவைகள் ஒற்றுமைப்பட்டு கோரிக்கை விடுத்தும் இதுவரையும் எமது புனித குர்ஆன்களையும் 83 அறபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளும் நீக்கப்படவில்லை.

எனவே, புனித றமழான் மாதம் நெருங்கிக் கொண்டிருப்பதால் விரைவாக எமது குர்ஆன்களை விடுவிப்பதுடன் 83 அறபுக் கல்லூரிகளின் பதிவுகளுக்காக விதிக்கப்பட்டுள்ள தடைகளும் நீக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொகிறேன் என்றார்.

இது விடயமாக அமைச்சர் ஹினிதும சுனில் செனவி கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் புனித குர்ஆன்களை விடுவிக்குமாறு முஸ்லிம் சமூகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்டகாலமாக என்னிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் இது தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளேன். எனவே முஸ்லிம்களின் புனித குர்ஆன்களையும், 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுக்கான தடைகளையும் நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

ShortNews

மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும் - மனோ கணேசன்!


மலையகத் தமிழ் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்திய பின்னரே பெருந்தோட்டக் கம்பனிகளுடன் புதிய குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.




பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மலையக மக்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல், பெருந்தோட்டத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 13,000 மில்லியன் ரூபாவை மக்களுக்காக ஒதுக்கியதாகக் கூறுவது தவறானது எனக் குற்றஞ்சாட்டினார்.




மேலும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகத் தீர்மானம் மேற்கொண்டு, வர்த்தமானி அறிவித்தல் மூலம் 200 ரூபா சம்பள அதிகரிப்பை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 




கடந்த முறை நல்லெண்ண அடிப்படையில் இரண்டாம் நிலை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த போதிலும், இம்முறை அவ்வாறு செய்யப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.




ஒவ்வொரு மலையகக் குடும்பத்திற்கும் 20 பேர்ச் குடியிருப்புக் காணி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் தனிக் குடும்பமாகக் கருதப்பட வேண்டும் என்றும் கூறினார். 




பயிரிடப்படாத தரிசு காணிகளைத் தோட்ட இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாக முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.




பெருந்தோட்டக் கம்பனிகளுடன் புதிய குத்தகை ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், காணி உரிமையை உறுதிப்படுத்துவதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 




அப்பாவி மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

SHAHNI RAMEES

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் கைது!

 



விவாகரத்துத் தீர்ப்பை விரைவாகப் பெற்றுக்கொடுப்பதற்காக

Zameera

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

 

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.


 


இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2 வயதும் 6 வயதுமுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


 


தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் மின்சாதன உபகரண விற்பனை நிலையம் அமைந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் மேல் தளத்தில் தங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.


 


தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டே தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


 


தீ பரவலுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், உரிய பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 

Zameera

பிரதமருக்கும் உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல்

 

உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீலகாந்த் மிஸ்ரா அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.


 


உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் உறவை எடுத்துரைத்ததுடன், உலக வங்கி இலங்கைக்கு வழங்கிவரும் ஆதரவுக்காகத் தமது நன்றியையும் தெரிவித்தார்.


 


இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள், எதிர்கொள்ளப்படும் பிரதான சவால்கள் ஆகியன குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


 


நல்லாட்சிக் கோட்பாடுகளுக்கு இணங்க, டிஜிட்டல்மயமாக்கலையும் நிறுவனக் கட்டமைப்புகளையும் வலுப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும் எனப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.


 


பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதில் தனியார் துறையின் வகிபாகம் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனியார் துறையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.


 


இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, நிலைபேறான வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதுடன், பொருளாதார அபிவிருத்தியின் நன்மைகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் நியாயமான முறையில் பகிரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.