ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் தற்போது சமூக ஊடகங்களில் சஞ்சரிக்கும் காணொளி போலியானது என அமெரிக்க தூரகத்தின் பேச்சாளர் நென்சி வென்ஹொன் உறுதிபடுத்தியுள்ளார்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் சமூக ஊடகங்களில் சஞ்சரிக்கும் மற்றுமொரு அறிக்கையும் போலியாக தயாரிக்கப்பட்டது என அமெரிக்க சட்டத்துறை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் வொசின்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் என காண்பிக்கப்படும் காணொளி இன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளது.
அந்த காணொளி போலியான முறையில் குரல் பதிவு செய்து திரிபுபடுத்தப்பட்ட வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூரகத்தின் பேச்சாளர் நென்சி வென்ஹொன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓடெகஸ் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்தை இன்று போலியான முறையில் தயாரித்து அது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
குறித்த காணொளியின் வர்ணம் போலியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்க சட்டதுறை திணைக்களத்தால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் போலி கடிதம் ஒன்றும் தற்போது சமூக ஊடகங்கங்களில் பரப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதமும் போலியானது என அமெரிக்க சட்டதுறை திணைக்களத்திடம் வினவிய போது உறுதிப்படுத்தப்பட்டது.
நவம்பர் 11 ஆம் திகதி அமெரிக்காவில் அரச விடுமுறை கடைப்பிடிக்கப்பட்டதாகவும் அதனால் அன்று இதுபோன்ற ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
