Our Feeds


Friday, May 29, 2020

www.shortnews.lk

தந்தையின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத சோகத்தில் தொண்டாவின் மகள் - மஸ்கட்டிலிருந்து, இந்தியா வழியாக இன்று இலங்கை வருகிறார்

 


அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை அவரது சொந்த இடமான வெவண்டனுக்கு கொண்டுசெல்ல விசேட ஹெலிகொப்டரை வழங்கியுள்ளது அரசு.

ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் விசேட பணிப்புரைக்கமைய வழங்கப்பட்டுள்ள இந்த ஹெலி, அவரது குடும்ப உறுப்பினர்களையும் இன்று காலை ஏற்றிச் செல்லவுள்ளது.

நேற்று பாராளுமன்றத்திலும் கட்சித் தலைமையகத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தொண்டமானின் பூதவுடல் அதன் பின்னர் இன்று வெவண்டனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இன்று வெவண்டனில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல் நாளை கொட்டகலை சி.எல்.எப் நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை மறுதினம் நோர்வூட் மைதானத்தில் இறுதிக்கிரியை இடம்பெறும்.

சனி, ஞாயிறு தினங்களில் மலையகத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் அஞ்சலிக்காக வரக்கூடுமென்பதால் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இறுதிக்கிரியைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதேவேளை அமைச்சர் ஆறுமுகத்தின் மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்களாக முயன்று வந்தார். அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளால் இறுதியாக இந்தியா ஊடாக அவர் இன்று இலங்கை வரவுள்ளார்.

கொழும்பு வந்தாலும் அவர் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா சுகாதார கட்டுப்பாடு வழிமுறைகளின் கீழ் அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்படவுள்ளார்.

இந்த சோகமான நிலைமையை கருத்திற்கொண்டு அவரை தூர இருந்து தந்தையாரின் பூதவுடலை பார்க்க அனுமதிப்பதா என்று சுகாதார அதிகாரிகள் ஆலோசனை நடத்தினாலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

தந்தையின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி தந்தையாரின் பூதவுடலை நேரடியாக காண கொரோனா நிலைமையால் ஏற்பட்டுள்ள தடை குறித்து குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக நேற்றிரவு அறியமுடிந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »