உங்களால எவ்வளவு நேரம் மூக்கை பொத்திக்கிட்டு மூச்சு விடாமல் இருக்க
முடியும். எனக்கு 30 செக்கன்கள் இருந்தாலே மூச்சுத் திணறல் ஏற்பட்டு விடும்.
எங்களை நாங்களே சோதிக்கும் போது கஷ்டமான நேரத்தில மூக்கை பொத்துவதை விட்டு... அப்படியே காற்றை இழுப்போம்.
ஆனால் ஜோர்ஜ் புளோயிட் என்ற ஆபிரிக்க அமெரிக்கரை மூச்சு கூட விட முடியாமல் சாவு வரைக்கும் கொண்டு சென்ற செய்தி இன்று உலகம் பூராவும் பரவி இருக்கிறது.
அமெரிக்கா என்ற மாபெரும் நாட்டில் வெள்ளியின மக்களை போல ஆபிரிக்க கறுப்பின மக்கள் உடப்பட பல்லின மக்கள் வாழ்கிறார்கள்.
கி.பி 1500 ஆண்டிற்கும் 1860 ஆண்டிற்கும் இடைப்பட்ட 360 வருட காலப்பகுதியில் ஆபிரிக்காவில் இருந்து சுமார் 12 மில்லியன் கறுப்பினத்தவர்களை ஆட்சி செய்த ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்கள் அடிமைகளாக கொண்டு வந்தார்கள்.
மனித குலத்தில் இடம்பெற்ற மாபெரும் இடம்பெயர்வாக இதை சொல்ல முடியும். சுமார் 50இற்கும் மேற்பட்ட ஆபிரிக்க குலத்தோர் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் சுமார் ஐந்து லட்சம் பேர் வட அமெரிக்காவிற்கும் அதிகமானோர் தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கிந்திய நாடுகளுக்கும் அனுப்பட்டனர்.
1600ஆம் ஆண்டு மெக்ஸிக்கோ நாட்டின் மெக்ஸிக்கோ சிட்டி, கியூபா நாட்டின் ஹவானா, பெருநாட்டின் லீமா போன்ற நகரங்களுக்கு அனுப்பட்டனர்.
இதனை ட்ரான்ஸ் - அட்லாண்டிக் அடிமைகள் வர்த்தகம் என்று சொல்வார்கள். இதனை ஒரு முக்கோண வடிவமாக சித்தரிக்கலாம்.
ஐரோப்பியர்கள் தங்களது ஆக்கிரமைப்பை மூன்று தூண்களாக சித்தரிக்கிறார்கள்.
அதன் ஆரம்பமும் முடிவும் ஐரோப்பாவிலே முடிகிறது.
இனி விஷயத்திற்கு வரப் போகிறேன். ஆங்கில படங்களில் நீங்கள் அடிமைகளை கப்பல்களில் கொண்டு வருவதை பார்த்து இருப்பீர்கள். குறிப்பாக கவ்போய் படங்களில் வெள்ளையினத்தவர்கள் குதிரைகளில் செல்லும் போது அவர்களது சேவகர்களாக கறுப்பினத்தவர்கள் அழைத்து வரப்படுவார்கள்....
இப்படி கப்பலில் வந்தவர்களில் 40 வீதமானோர் சார்ள்ஸ் டவுன், சவூத் கரோலினா, மற்றும் அமெரிக்காவின் மத்திய பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அமெரிக்கா யாருக்கும் சொந்தமான நாடு இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். செவ்விந்தியர்களை தாக்கி வெள்ளையர்கள் சுவிகரித்த பூமியே அமெரிக்க என்பதை நீங்க உணர வேண்டும்.
இன்று பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் 330,832,890 பேர் வாழ்கிறார்கள். இதில் 72 வீதமானோர் வெள்ளை இனத்தவர்களும், 12.6 ஆபிரிக்க கறுப்பினத்தவர்களும் ஏனையோரில் அதிகமானோர் லத்தினோ அமெரிக்கர்கள்.
இவர்கள் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் வாழ்கிறார்கள். இதில் மெனிசோடா மாகணத்தில் நடந்த கதை தான் உலகத்தையே உலுக்கி இருக்கிறது. எழில்மிக்க அழகிய மாகாணமான மினசோட்டாவில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குளங்கள் இருக்கின்றன.
இங்கு சுமார் 5.65 மில்லியன் மக்கள் அந்த மாகணத்தில் வாழ்கிறார்கள் . இதில் அதிகமானோர் மினியாபொலிஸ் நகரில் வாழ்கிறார்கள்.
அங்கு சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். இதில் பெரும்பான்மை சமூகத்தவர்கள் வெள்ளை இன மக்கள் அவர்கள் சுமார் 59.3 வீதம். அவர்களுக்கு அடுத்ததாக ஆபிரிக்க கறுப்பின மக்கள் அவர்கள் 19.3 வீதத்தினர். ஏனையோர் லத்தின் மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்தோர். இப்படி வெள்ளையின மக்கள் அதிகமாக வாழும் நகரில் தற்போது பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமான கறுப்பினத்தவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்து கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள்.
இவ்வாறான நிலையில்..
மே மாதம் 25ஆம் திகதி மினியா பொலிஸ் வழமை போல இயங்கி கொண்டிருந்தது. வாகனங்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது. தமக்கு வேண்டிய சிகரட்டுகளை வாங்குவதற்காக தமது நண்பர்களோடு காரில் வந்து கொண்டிருந்தான் ஜோரஜ் புளோயிட்.
'ஹேய் இங்கே நிறுத்து... நான் போய் சிகரெட் வாங்கி வாறேன்" - ஜோர்ஜ்.
அவரது வேண்டுக்கோளையடுத்து காரை கப் புட்ஸ் கடை முன் நிறுத்துகிறார் அவரது நண்பர்.
46 வயதான ஆபிரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளோயிட் நடிகர் விஷால் போன்று உயரமான கட்டுமஸ்தான உடம்பை கொண்டவர். கடைக்குள் சென்று தமது பாக்கெட்டில் இருந்த 20 அமெரிக்க டொலர்களை கடை பையனிடம் கொடுக்கிறார்.
பின்னர் சிகரட் பெக்கட்டை வாங்கி பொக்கட்டுக்குள் போட்டு வெளியேற முனைந்த போது.... அவனுக்கு அந்த இருபது டொலர் கள்ள நோட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
'சார் அந்த சிகரட் பெக்கட்டை திருப்பி தாங்க..." கடை பையன 'ஏன்.." - புளோயிட் 'உங்க பணம் செல்லாது.." அதனை உதாசீனம் செய்துகடையில் இருந்து புளோயிட் வெளியேறுகிறான்.
ஆத்திரமடைந்த கடைப் பையன் உடனடியாக 911 என்ற அவசர பொலிஸ்
இலக்கத்தை இரவு 20:01 நிமிடமளவில் அழுத்துகிறான்....
'ஹலோ அவசர பொலிஸ்" 'மேடம்... நம்ம கடைக்கு வந்த நபர் இருபது அமெரிக்க டொலரை தந்தார்..அது கள்ள நோட்டாக இருக்கலாம் என்ற சந்தேகமாக இருக்கிறது..." - கடைப் பையன்.
'அப்படியா' 'மேடம் அவன் குடித்து இருக்கிறான். அதோடு நேராக நிற்க கூட முடியாமல் தடுமாறுகிறான்" - கடைப் பையன்.
'பொறுமையாக இரு பொலிசஸார் வருவாங்க.."தங்க்யூ" என அவன் தொலைபேசி இணைப்பை துண்டித்து புளொயிட் காரில் ஏறுவதை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்தான்.
காருக்கு சென்ற புளோயிட் கடையில் ஏற்பட்ட அனுபவத்தை நண்பனுக்கு சொல்லி கொண்டிருந்தான். அந்நேரம் அவனது கார் அருகே ஒரு பொலிஸ் கார் சைரனுடன் வந்து நின்றது.
'சார் அவன் தான்.." என பையன் புளோயிட்டை சைகை மூலமாக பொலிசாருக்கு காட்டினான். அந்நேரம் 20:08 பொலிஸ் காரில் இருந்து இறங்கிய அதிகாரியான தோமஸ் தமது கை துப்பாக்கியை வெளியே எடுத்து கொண்டு புளோயிட்டின் கார் நோக்கி நடந்து கதவை தட்டினார்....
'ஹேய் உன்ட கைகளை காட்டு" என கூறிய பொலிஸ் அதிகாரி தமது துப்பாக்கியை புளோயிட் மீது குறி வைக்கிறார். ஏன் அந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக துப்பாக்கியை எடுத்தார் என்ற கேள்வி உங்களுக்கும் எழலாம்.
ஆனால் கள்ள நோட்டு வைத்திருந்தவரிடம் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற அச்சம் அவருக்கு எழுந்திருக்கிறது. கடுமையான போராட்டத்தில் அவரை வெளியே இழுக்க பொலிசார் முயற்சி செய்துள்ளனர்.
அப்போது நேரம் 20:14 ஒரு மாதிரி வெளியே இழுத்து கீழே குப்புற படுக்க வைத்துள்ளனர். 'சார் எனக்கு கலோஸ்டரபிக் நோய் இருக்கிறது" என சொல்லி இருக்கிறார் புளோட்.
அந்நேரம் வருகிறார் டெரிக் சோவீன் என்கிற பொலிஸ் அதிகாரி .44 வயதான அவர் வெள்ளையினத்தை சேர்ந்தவர்.
தமது காரை நிறுத்தியவர் டெரிக் நேராக சந்தேக நபரான புளோயிட் அருகே செல்கிறான். உடனடியாக சந்தேகநபரை தர தரவென்று இழுத்து கொண்டு காரின் பயணிகள் இருக்கும் பக்கத்தில் குப்புறப் படுக்க வைக்கிறான்.
கையில் விலங்குகளுடன் இருந்த புளோயிட்டின் கழுத்தில் பொலிஸ்
உத்தியோகஸ்தரான டெரிக் சோவீனின் முழங்கால் குதி வைக்கப்படுகிறது. சுமார் 8 நிமிஷம் 46 செக்கன்கள் அவனது முழங்கால் டெரிக்கின் கழுத்தில் இருக்கிறது..
'ஐயோ என்னால் மூச்சு விட முடியாமல் இருக்கிறதே..." என புளோயிட் கதறுகிறான். ஆனால் அதனை கவனித்தில் கொள்ளாத அவன் முழங்காலை எடுக்க மறுக்கிறான். அவனை சுற்றி இருந்த பொலிசார் எதுவுமே சொல்லாமால் மௌனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்தனர்.
அது மட்டுமல்ல கத்த தொடங்கினார்கள். இதனை அவதானித்த பொலிஸார் உடனடியாக அம்புலன்ஸை அழைத்தார்கள்.
ஆனால் புளோயிட்டை காப்பாற்ற வைத்தியர்களால் முடியவில்லை. புளோயிட் உயிரிழந்த சம்பவம் காட்டுத் தீ போல பரவியது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் புளோயிட்டின் கழுத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் முழங்கால் இருக்கும் வீடியோ வைரலானது.
இதனை பார்த்த அமெரிக்க கறுப்பின மக்கள் ஆத்திரமடைந்தனர்.
மினியாபொலிஸ் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.கடைகளை நொறுக்கினார்கள்.
இந்த சம்பவத்தை நேரடியாக படம் பிடிக்க சென்ற சீ.என்.என் நிருபரை தொலைக்காட்சி நேரலையின் போதே கைது செய்தனர். ஆனால் மக்களின் ஆவேசத்தை பார்த்த எவி.பி.ஐ அதிகாரிகள் உடனடியாக டெரிக் சோவினை கைது செய்தனர். அத்துடன் அவர் உடப்பட நான்கு பேரை பதவி நீக்கம் செய்தனர்.
ஏன் புளோயிட்டை கைது செய்து சிறையில் அடைக்காமல் கொலை செய்தார்கள் என்று மினியாபொலிஸ் நகர மேயர் கேள்வியை எழுப்பி உள்ளார்.
19 வருடமாக பொலிஸ் சேவையில் இருந்த டெரிக்கும் கொல்லப்பட்ட புளோயிட்டும் நைட் கிளப்பொன்றில் செக்கிரியூட்டி கார்டுகளாக வேலை பார்த்து இருக்கிறார்கள்.
இருவருக்கும் முன்பே எதாவது முறுகல் இருக்கிறதா என்ற சந்தேகம் எப். பி. ஐ அதிகாரிகளுக்கு எழுந்து இருக்கிறது.
தற்போது கொலை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள டெரிக் மீது கடந்த 19 ஆண்டுகளில் 17 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன. இதில் இரண்டை தவிர ஏனையவற்றில் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 33வருட சிறை தண்டனை வழங்கப்படலாம். ஆனால் இந்த மாதிரியான வழக்குகளில்
பொலிசாருக்கு சார்பாகவே நீதி வழங்கப்பட்டுள்ளதாக பல தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.
இதே மாதிரியான சம்பவமொன்று 2014 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 17 ஆம் திகதி நடக்கிறது. எரிக் கார்னர் எனும் 43 வயது கறுப்பின ஆபிரிக்கர், கள்ளச் சிகரட்டுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்படுகிறார்.
உயர்ந்த பருமான அவரை பொலிசார் கீழே தள்ளி குப்புற படுக்க வைத்து
நசுக்கிறார்கள்.. அவரோ 'ஐயோ என்னால் மூச்சு விட முடியாமல் இருக்கிறது" என கத்துகிறார். ஆனால் அவரை பொலிசார் விடவில்லை. சிறிது நேரத்தில் அவரை காப்பாற்றும் முகமாக அம்புலன்ஸ் அழைக்கப்படுகிறது. ஆஸ்பத்திரியில் அவர் உயிர் பிரிகிறது. இதற்காக நியோராக் 5.9 மில்லியன் டாலர்களை நட்ட ஈடாக வழங்குகிறது.
ஆனால் ஆறு பிள்ளைகளின் தந்தை அநாதரவானது தான் உண்மை. தற்போது ப்ளொயிட்டின் மரணம் காரணமாக அமெரிக்காவின் பல பகுதியில் ஆர்ப்பாட்டம், வன்செயல்கள் இடம்பெறுகின்றன.
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்கார்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை விடுதலை செய்வதற்கான பிணை பணத்தை கட்ட முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜோ பிடன் நிதி சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளார்.
77 வயதான இவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் முக்கிய வேட்பாளர்.
இந்த வருடம் நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு புறம்.. மற்றைய பக்கம் கறுப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் முக்கிய பங்கை வகிக்கும். புளோயிட் போன்று பலர் இன மத நிற வெறி காரணமாக உலகின் பல பாகங்களில் மூச்சு விட முடியாமல் மரணமாகின்றனர்.
இருக்கும் வரை இதயத்தை நேசிப்போம்...
இறுதியாக ஒரு குறிப்பு...அந்த 20 டொலர்... கள்ளநோட்டு அல்ல என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர் என்ற செய்தி இந்த கட்டுரை எழுதி முடியும்போது வந்துள்ளதையும் குறிப்பிட விரும்புகிறேன்...
