இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள வெட்டுக்கிளி பிரச்சினை தற்போது இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள வெட்டுக்கிளி இலங்கையை தாக்காத போதிலும், மற்றுமொரு வகையான வெட்டுக்கிளியொன்றே இலங்கையை தாக்கியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்
டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவிக்கின்றார்.
குருநாகல் - மாவத்தகம பகுதியிலுள்ள பயிர் நிலங்களை கடந்த சில தினங்களாக ஒரு வகை வெட்டுக்கிளி தாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சோளம், வாழைமரம், மாமரம் உள்ளிட்ட அனைத்து விதமான மரங்களையும் இந்த வெட்டுக்கிளி தாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் படையெடுத்திருக்கும் வெட்டுக்கிளி ஒரு வகையான பயிர்களை மாத்திரமே உட்கொள்கின்ற போதிலும், இலங்கையில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான பயிர்கள் மற்றும் மரங்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கூட்டமாக வருகைத் தந்துள்ள இந்த வெட்டுக்கிளியினால் எதிர்காலத்தில்
பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பத்திலேயே இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
இந்த வெட்டுக்கிளி இலங்கைக்கு எவ்வாறு படையெடுத்தது என கேட்க்கப்பட்ட போது, குறித்த வகையிலான வெட்டுக்கிளி ஏதேனும் நாடொன்றிலிருந்து இலங்கைக்குள் பிரவேசித்து இனப்பெருக்கத்தை ஏற்படுத்தியதன் ஊடாக இவ்வாறு படையெடுத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு இல்லையென்றால், இலங்கையிலேயே இந்த வெட்டுக்கிளி
உருவாகியிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிடுகின்றார். எவ்வாறாயினும், குறித்த வெட்டுக்கிளியின் மாதிரிகளை தாம் ஆய்வுக்கு எடுத்துள்ளதாகவும், விரைவில் இந்த வெட்டுக்கிளி இலங்கைக்குள் பிரவேசித்த விதத்தை சரியாக கூற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதுஎவ்வாறாயினும், குறித்த வகை வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதம் விளைவிக்கும் பட்சத்தில் அவற்றை ஆரம்பத்திலேயே இல்லாதொழிக்க விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
ஓரிரு வெட்டுக்கிளிகள் இருக்குமானால், அவற்றை கைகளில் எடுத்து அழித்து விட முடியும் என கூறிய விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கூட்டமாக இருந்தால் அண்மையிலுள்ள விவசாய திணைக்கள அதிகாரிகளை தெளிவூட்டி அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாய திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரக்கோன் தெரிவித்தார்
