இலங்கையில் பொது போக்குவரத்துக்களின் ஊடாகவே மீண்டுமொரு முறை கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
இலங்கையின் பொது போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு இடையிலும் பொது போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், கொவிட்-19 வைரஸ் தொற்று மீண்டும் ஏற்படுமாயின், அதற்கு பொது போக்குவரத்து சேவைகளே மிகவும் ஆபத்தான இடமாக காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பொது போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்தும் பயணிகளை ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய அழைத்து செல்லுதல் கட்டாயமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கொரோனா மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புமாக இருந்தால், அதனூடாக பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
