நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக்,கொண்டோம். வந்த நோக்கத்தை சொன்னோம்.
பின்னர் மிகுந்த ஏமாற்றத்தோடும், முரட்டுத்தனத்துடனும், சற்று கோபத்தோடும், "இப்போது எதைப் பற்றி பேச என்ன இருக்கிறது? தயவு செய்து எங்களை மன்னியுங்கள், நாங்கள் பேச விரும்பவில்லை" என்றார்.
இருப்பினும், அவர் நமாஸ் முடித்து வந்த பின், எங்கள் கோரிக்கையின் பேரில் பேச ஒப்புக்கொண்டார்.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை உடைத்த பின் ஏற்பட்ட கலவரத்தில் உடைந்த அல்லது எரிக்கப்பட்ட மசூதிகள் மற்றும் வீடுகளை பழுதுபார்ப்பதை மேற்பார்வையிட 1993 ல் ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகத்தால் சையத் அக்லக் அகமது நியமிக்கப்பட்டார்.
பிறகு நடந்ததை சையத் அக்லாக் அஹ்மத் சொல்லத் தொடங்கினார்,
"1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், முழு அயோத்தி நகரத்திலும் சுமார் 18-20 மசூதிகள் இடிக்கப்பட்டன. ஒரு மசூதியை உடைத்த பின்னர், அங்கே ஒரு சிலை கூட வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து மசூதிகளும் உடைந்தபின், அப்போதைய மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் அவை பழுது பார்க்கப்பட்டன".
பழுது பார்க்கும் வேலைகளை கண்காணிக்கும்,பொறுப்பை அவர் எனக்கு அளித்தார். கூடுதல் ஆட்சியரின் மேற்பார்வையில், பொதுப்பணித் துறை ஊழியர்கள் மராமத்து வேலைகளை செய்தனர். பழுதுபார்க்கும் வேலைகள் அனைத்தும் ஓராண்டிற்குளேயே முடிந்து விட்டன.
சையத் அக்லாக் அகமத் இருக்கும் இடத்திலும் ஒரு பெரிய மசூதி இருந்தது, அருகிலேயே ஒரு மதரஸாவும் இருந்தது. அவர்களின் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டு, வீடும் எரிக்கப்பட்டது.
அக்லாக் அஹ்மத், தனது புதிதாக கட்டிய வீட்டில், மசூதியின் உடைந்த சில குவிமாடங்களை இன்னும் வைத்திருக்கிறார். இந்த புதிய வீட்டில் ஒரு மதரஸாவை நடத்தி வருகிறார், வேறு சிலரின் உதவியுடன் அருகிலேயே மீண்டும் ஒரு மசூதியைக் கட்டினார்.
அவரைப் பொருத்தவரை, பெரும்பாலான மசூதிகள் கட்டப்பட்டு விட்டன, ஆனால் சில மசூதிகள் எஞ்சியிருந்தன, அவை இன்னும் அப்படியே உள்ளன. இந்த மசூதிகளில் ஒன்று தோராஹிகுவாவிலும், மற்றொரு மசூதி ராஜ்காட் அருகே உள்ள ஜஹாங்கிர்பக்ஷ் பகுதியிலும் உள்ளது.
தோராஹிகுவா மசூதி இருநூறு , இருநூறைம்பது ஆண்டுகள் பழமையானது என்றும் அதன் சுவர்கள் லகௌரி செங்கற்களால் ஆனவை என்றும் அவர் கூறுகிறார்.
மசூதிக்கு முன்னால் உள்ள இரண்டு கோபுரங்களும் அப்படியே இருக்கின்றன, அதே நேரத்தில் உடைந்த சுவர் மீண்டும் கட்டப்பட்டுள்ளது, ஆனால் அதன் மீது கூரையை இன்னும் நிறுவ முடியவில்லை. இந்த மசூதி ராம் ஜென்ம பூமி வளாகத்தின் பின்னால் உள்ளது.
1992 டிசம்பர் 6-க்குப் பிறகு, இனக் கலவரம் நாடு முழுவதும் பரவியது மற்றும் ஊரடங்கு உத்தரவு அயோத்தியில் பல நாட்கள் இருந்தது.
அயோத்தியின் உள்ளூர் மக்கள் கூறுகையில், டிசம்பர் 6ஆம் தேதிக்கு முன்பே, இதுபோன்ற சூழ்நிலை உருவாகி இருந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடிவந்ததாகவும் கூறுகின்றனர்.
தகாத சம்பவம் நடக்கலாம் என்ற அச்சத்தில், அனைத்து முஸ்லிம்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மற்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். உள்ளூர் மக்கள் கூற்றுப்படி, வெளியில் இருந்து வந்தவர்கள் முஸ்லிம் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளையும், அயோத்தியில் உள்ள அனைத்து மசூதிகளையும் சேதப்படுத்தினர்.
பாபர் மசூதியின் கடைசி இமாம் மௌலானா அப்துல் கஃபர், அயோத்தியில் பிரதான சாலையில் ஒரு மரக்கால் இயந்திரம் (மர வெட்டும்) வைத்திருந்தார், பின்னாலேயே வீடும் இருந்தது.
அந்த இயந்திரமும் வீடும் அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்பதற்கு இன்றும் சாட்சியமளிக்கின்றன. மௌலானா அப்துல் கஃபரின் பேரன் ஷாஹித் இ ரிக்ஷா ஓட்டி வருகிறார் .
இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், "டிசம்பர் 6 காலை, மசூதி தாக்கப்பட்டு, பின்னர் நகரின் பல முஸ்லிம் பகுதிகளில் மக்கள் தாக்கப்பட்டனர். எங்கள் வீடு சாலையில் இருந்தது. கூட்டம் திடீரென நுழைந்தது. என் தந்தையை அடித்து கொன்றனர். எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாங்கள் காவல் நிலையத்திற்கு ஓடியதால் தப்பித்தோம். இயந்திரம் முற்றிலும் உடைந்துவிட்டது, அது இன்றும் அப்படியே உள்ளது. "
இழப்பீடு
சில அமைப்புகளிடமிருந்தும் இழப்பீடு கிடைத்தது, ஆனால் உடைந்ததை சரிசெய்யும் அளவிற்கு போதுமானதாக அது இல்லை என்று ஷாஹித் கூறுகிறார்.
அவரைப் பொருத்தவரை, அரசாங்கத்திடமிருந்து ஆரம்பத்தில் அவருக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. கிடைத்த உதவி பல அமைப்புகளிடமிருந்துதான் வந்தன. இருந்தாலும் ஏற்பட்ட பாதிப்பை, அரசு மதிப்பீடு செய்து ஈடுசெய்தது என்று ஹாஜி அக்லாக் அகமது கூறுகிறார்.
"இழப்பீடு மிகக் குறைவாக இருந்தது, ஆனால் கொடுக்கப்பட்டது. சுமார் 300 வீடுகள் சேதமடைந்தன அல்லது எரிக்கப்பட்டன. அனைவருக்கும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
அயோத்தியின் பிரதான சாலையில் உள்ள கட்டியாலா பனை மசூதியும் உடைக்கப்பட்டது. பழுதுபார்ப்புக்காக கிடைத்த பணத்துடன் சுவர்கள் மட்டுமே கட்டப்பட்டன,கூரை அல்ல. கூரையில் இப்போதும் ஒரு தகரம் ஷீட் உள்ளது. அயோத்தி ரயில் நிலையத்தை நோக்கி செல்லும் பிரதான சாலையில் கோத்தியா வட்டாரத்தில் ஒரு பெரிய மசூதியும் உள்ளது.