கொரோனா வைரசுக்கு எதிராக கேகாலை வைத்தியர் ஒருவரினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் உள்ளூர் ஆயுர்வேத தயாரிப்பு ஆயுர்வேத திணைக்களத்தின் உருவாக்க குழுவினால் (Formation Comity) அங்கீகரிப்பதினால் மாத்திரம் அதனை பயன்படுத்த முடியாது என்று அமைச்சரவை இணை பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் உடனான சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உருவாக்க குழு அங்கீகரித்த பின்னர் இந்த மருந்து தொடர்பில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதற்கு பின்னரே இது தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். மேற்கத்தேய வைத்தியர் முறைக்கு அமைவாக இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் நோய் குணமடையக்கூடிய தன்மையை ஆய்வு மூலம் கண்டறிய வேண்டும்.
அதாவது எவிடன்ஸ்பேஷ் மெடிக்கல் முறைக்கு அமைவாக இதனை பரிசேதனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னர் இந்த மருந்து தொடர்பில் கிடைக்கும் அங்கீகாரத்திற்கு அமையவே இதுதொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மருந்தை பலர் பெற்று பயன்படுத்தியிருப்பதாக செய்தியாளர் குறிப்பிட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், பொதுமக்கள் சுயமாக இதனை பெற்றுக்கொள்வதை எம்மால் தடுக்க முடியாது என்று தெரிவித்ததுடன், இதனை உணவு பொருளாக அடையாளப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
