Our Feeds


Wednesday, December 9, 2020

www.shortnews.lk

வாழைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர், பிரதித் தவிசாளர் இருவரும் விளக்கமறியலில்!

 



வாழைச்சேனை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலை காரணமாக கைது செய்யப்பட்ட பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர் உட்பட இருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் எச்.எம்.எம். பஸீல் கட்டளை பிறப்பித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சபை உறுப்பினர் எம்.வாஸ்தீன் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையானது 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட அறிக்கை கடந்த மாதம் 30 ஆம் திகதி சமர்பிக்கப்படவிருந்த நிலையில் சபை தவிசாளரினால் நேற்றுவரை (08) வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன்படி தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் மீண்டும் சபை அமர்வு கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக அமைதியற்ற சூழ்நிலை அங்கு உருவானது.

சபை கூடுவதற்கு முன்பதாக சபை மண்டபத்தை விட்டு தவிசாளர் வெளியில் சென்றபோது மண்டப நுழைவாயிலில் உப தவிசாளர் எதிரே சந்தித்து கொண்டதாகவும் இதனையடுத்து அந்த இடத்தில் அமைதியற்ற சூழ்நிலை இருவருக்கிடையில் இடம்பெற்றதாகவும், இதனையடுத்து சபை வளாகத்தில் அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அத்துடன் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித்தின் ஆடையை கிழித்து தாக்கியதாக கூறி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக   விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »