கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணித் தாயொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த கர்ப்பிணித் தாய் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
திஸ்ஸமஹராம – யாயகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த கர்ப்பிணித் தாயின் 8 மாத சிசுவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம பகுதியில் கடந்த 29ம் திகதி நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் இந்த கர்ப்பிணித் தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 12 பேர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, மஹரகம பகுதியைச் சேர்ந்த 17 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், அவர்களில் சிலர் இந்த விருந்துபசார நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், குறித்த பெண்ணுக்கு கடந்த 5ம் திகதி சுவாச கோளாறு மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளில், இருவருக்கும் கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கர்ப்பிணித் தாய், மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது கணவர் அம்பலங்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த 4வது கர்ப்பிணத் தாய் இவர் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
