Our Feeds


Saturday, June 5, 2021

www.shortnews.lk

ட்ரம்பின் பேஸ்புக் கணக்கை 2 வருடங்களுக்கு முழுமையாக முடக்குவதாக பேஸ்புக் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு.

 



அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.


அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். இந்த ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக வாஷிங்டனில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூடியது.

அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மேலும், தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் டொனால்ட் ட்ரம்பின் அதிகாரப்பூர்வ கணக்குகளை தற்காலிகமாக முடக்கின.

டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்பற்றி வந்தநிலையில் முடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் பக்கம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டொனால்டு டிரம்ப் கூறுகையில் “2 ஆண்டுகள் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை” என தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »