(எம்.மனோசித்ரா)
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7. வைரஸ் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்களின் மாதிரிகளில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதோடு அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியை இரு கட்டடங்களாகவும் பெற்றவர்கள் என்றும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் குறித்த மரபணு பரிசோதனைகள் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அறிக்கை இன்று (10) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மரபணு பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் வினவியபோதே பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் பி.1.617.2 (டெல்டா) வைரஸ் வஸ்கடுவ பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் ஹோட்டல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட மாதிரியில் இனங்காணப்பட்டுள்ளது. இந்தியாவில் பரவும் நிலைமாறிய இந்த வைரஸ் தொற்றாளர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளமை இது இரண்டாவது தடவையாகும்.
இதேபோன்று பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட பி.1.1.7. (அல்பா) வைரஸானது கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமகாராம, கராப்பிட்டி மற்றும் றாகம ஆகிய பிரதேசங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் இனங்காணப்பட்டுள்ளது. இந்த வைரஸானது இதுவரையில் இலங்கையில் 80 நபர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இனங்காணப்பட்டுள்ளது.
