(லியோ நிரோஷ தர்ஷன்)
யார் எதைக் கூறினாலும் மக்களே இறுதியில் அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். நாட்டினதும் மக்களினதும் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றத்துக்கு செல்ல தீர்மானித்தாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
நாடாளுமன்ற மீள் வருகை குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகள் கலந்துரையாடியுள்ளதுடன், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து கட்சி உறுப்பினர்களுடன் இன்று (10) கலந்துரையாடிய ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்,
நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. தனிநபர் பொருளாதாரத்தை வலுப்படுத்தாது தேசிய பொருளாதாரம் வலுவாகாது. எனவே தீர்க்கப்படா பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கொவிட் -19 நெருக்கடி, பொருளாதார பாதிப்பு, இயற்றை அழிவு மற்றும் கப்பல் விபத்து என இலங்கையை சூழ பிரச்சினைகளே உள்ளன.
ஆகவே யாருடைய குறைகளையும் நாம் கூற வேண்டியதில்லை. எனது நாடாளுமன்ற வருகை அவர்களுக்கு தலைப்பு செய்திகளாக இருந்தாலும் நாட்டையும் மக்களையுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உறுதியாகவே நாம் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சி எதை கூறினாலும் இறுதியில் மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகள் குறித்து பேசுவற்கே நான் நாடாளுமன்றம் செல்கிறேன் என்றார்.
