ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று (09) முதல் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து காணப்படுவதுடன், மரணங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (09) அவசர கூட்டம் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்களில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொரோனா தொற்றினால் ஒரு மரணமும் இடம்பெற்றுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறித்த பகுதி மக்கள் தனிமைப்படுத்தலினை மீறாது வீடுகளில் இருக்குமாறும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
