(எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸ் மா அதிபர் பணியகத்தில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மனைவி, ஒரே மகன் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சகரும் கொவிட் – 19 தொற்று காரணமாக குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மகன் சட்டத்துறை மாணவன் என்பதுடன் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில், கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலை கொவிட்-19 சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்ப்ட்டுள்ளார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அதற்கு முன்பதாகவே கடந்த வாரம், குறித்த உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி, கொவிட் -19 தொற்றுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
