Our Feeds


Tuesday, August 31, 2021

www.shortnews.lk

FOREIGN_BREAKING: ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் 73 விமானங்களை செயலிழக்கச் செய்துவிட்டு புறப்பட்ட அமெரிக்க இராணுவம்

 



ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் 73 விமானங்கள் மற்றும் 97 இராணுவ வாகனங்களை அமெரிக்கப் படைகள் செயலிழக்கச் செய்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


அமெரிக்கப் படைகளின் மத்திய கட்டளைப் பயணியகத்தின் தளபதி ஜெனரல் கென்னத் மெக்கன்ஸி இது தொடர்பாக கூறுகையில், 73 விமானங்கள், 70 கவச வாகனங்கள், 27 ஹம்வீ ரக இராணுவ வாகனங்களை அமெரிக்கப் படையினர் செயலிழக்கச் செய்தனர்.

அவ்விமானங்கள் மீண்டும் பறக்க மாட்டா, அவற்றை எவராலும் இனி ஒருபோதும் இயக்கவதற்கு முடியாது’ என்றார்.

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க இராணுவம் காபூல் விமான நிலையத்தை முக்கிய இராணுவ தளமாக பயன்படுத்தி வந்தது.

அங்கு இராணுவ வாகனங்கள், விமானங்கள், ஹெலிகொப்டர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. போரில் பயன்படுத்திய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றில் சில பழுதாகி இருந்தன.

அமெரிக்க படை அவசரமாக வெளியேறும் நிலையில் பழுதான விமானங்கள், ஹெலிகொப்டர்கள், கவச வாகனங்கள் மற்றும் பல தளவாடங்கள் ஆகியவற்றை திரும்ப எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அப்படியே விட்டு சென்றாலும் அவற்றை தலிபான்கள் பயன்படுத்தும் நிலை இருந்தது. எனவே விமானங்கள், ஹெலிகொப்டர்கள் இராணுவ வாகனங்களை அழித்துவிட்டு வெளியேறினார்கள். இனி ஒருபோதும் அதை பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டன.

இவ்வாறு கடந்த 2 வாரத்தில் 73 விமானங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவ ஜெனரல் கென்னத் மெக்கன்ஸி கூறினார்.

எங்கள் படையினர் விட்டு சென்ற எந்த ஒரு பொருளையும் தலிபான்கள் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் முற்றிலும் செயலிழக்க செய்து அழித்து இருக்கிறோம். இனி அவற்றால் யாருக்கும் எந்த பயனும் இருக்காது என்று கூறினார்.

அதேவேளை, அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையை அமெரிக்கா செயலிழக்கச் செய்துள்ளது. காபூல் விமான நிலையத்தில் இவை விட்டுச் செல்லப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை காபூல் விமான நிலையம் நோக்கி ஐ.எஸ் இயக்கம் ஏவிய ரொக்கெட்டுகளுக்கு எதிராகவும் மேற்படி ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை அமெரிக்கப் படையினர் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் படையினருக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கவச வாகனங்கள் முதலானவற்றை, ஆப்கான் படையினர் சரணடைந்ததையடுத்து தலிபான்கள் கைப்பற்றியிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »