(எம்.எப்.எம்.பஸீர்)
இந்நிலையில், அவரது சடலத்தை, கொவிட் -19 தொற்றினால் உயிரிழந்தோரை அடக்கம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு – ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடியில் அடக்கம் செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (29) உத்தரவிட்டுள்ளது.
பொட்ட நெளபர் எனப்படும் மொஹம்மட் நியாஸ் நெளபர் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட நீதிவான் நீதிமன்ற விசாரணைகளையடுத்து இதற்கான உத்தரவு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பொட்ட நெளபர், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதன்போது அங்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில், பொட்ட நெளபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொட்ட நெளபர் சிகிச்சைகளுக்காக கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெறும்போதே நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையிலேயே நேற்று அது தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனையடுத்தே அடக்கம் செய்வதர்கான மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலக குழு ஒன்றுடனான மோதலில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் மொஹம்மட் நியாஸ் மொஹம்மட் நெளபரின் வலது கண் பாதிக்கப்பட்டது. இதனையடுத்தே அவர் பொட்ட நெளபர் எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்துள்ளார். அவர் அப்பெயர் தொடர்பில் விருப்பத்துடன் இருக்கவில்லை என அவரது வாக்குமூலங்களில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவும் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ. உபாலி ஆகியோர் கடந்த 2004 நவம்பர் 19 ஆம் திகதி, கொழும்பு 7, சரண வீதியில் உள்ள நீதிபதியின் வீட்டுக்கு முன்னால் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொலை தொடர்பில், சதித் திட்டம் தீட்டி ஒன்றிணைந்து செயற்பட்டதாக கூறி, பிரபல பாதாள உலகத் தலைவனாக அப்போது வலம் வந்த பொட்ட நெளபர் எனும் மொஹம்மட் நியாஸ் நெளபருக்கும், சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் மேலும் நால்வருக்கும் எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. எச்.சி. 2365/ 2005 எனும் வழக்கு இலக்கத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த அவ்வழக்கில் ஹேவா விதாரன நிஷாந்த உதய குமார, சம்பத் துஷார அபேவிக்ரம, ஹென்றி சுஜித் ரூபசிங்க, எம்.பி. சுமேத நிரோஷன ஆகியோர் ஏனைய பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையிலேயே இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த கொலை வழக்கில் பொட்ட நெளபர் உள்ளிட்ட ஐவரையும் குற்றவாளைகாளாக கண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம், கொலைக் குற்றம் தொடர்பிலான நீண்ட தீர்ப்பாக கருதப்படும் தமது தீர்ப்பை கடந்த 2005 ஜூலை நான்காம் திகதி அறிவித்தது. அதன்படி குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
