Our Feeds


Monday, September 13, 2021

www.shortnews.lk

குருநாகல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பலர் ஒரு தடுப்பூசியை கூட ஏற்றிக்கொள்ளவில்லை

 



12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பலர் இன்னும் ஒரு தடுப்பூசியையேனும் ஏற்றிக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் மரணிப்போரில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பது புள்ளிவிவரத் தகவல்களின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே மேற்கண்ட தகவலும் வெளியாகியுள்ளது. பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இது கண்டறியப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எம்.எம். சித்ராநந்த தெரிவித்தார்.

“ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைவாக, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றுமு் அவர் மேலும் தெரிவித்தார்.

தடுப்பூசியை பெறாத 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிணங்க, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசியை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களின் ஊடாக கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கொழும்பு நகரில் 60 வயதிற்கு மேற்பட்ட 92 சதவீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் என கொழும்பு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார். எஞ்சிய 8 சதவீதமானவர்களுக்கும் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய பலர் வீடுகளிலேயே தங்கியுள்ளனர் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சை கட்டமைப்பில் உள்ளடக்கப்படாத பெரும்பாலானோர் வீடுகளில் சிகிச்சை பெறுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், அனைவரையும் கவனத்திற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »