Our Feeds


Saturday, September 11, 2021

www.shortnews.lk

BREAKING: ஒரே வீட்டில் தந்தை, தாய், மகள் கொரோனாவில் மரணம் - அடக்கம் செய்த மௌலவி உட்பட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 



(எம்.எப்.எம்.பஸீர்)


வீட்டில் மரணித்த ஒருவரை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி புத்தளம் – வேப்பமடு மையவாடியில் அடக்கம் செய்தமை குறித்த விடயத்தில், நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த சடலம் நேற்று மீள தோண்டி எடுக்கப்பட்டது.

மணல்காடு பொது சுகாதார பரிசோதகர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, புத்தளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.குமாரதாச புத்தளம் நீதிமன்றில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தே குறித்த சடலம் இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டது.

புத்தளம் நீதிவான் அசேல டி சில்வாவின் கண்காணிப்பில், புத்தளம் உதவி சட்ட வைத்திய அதிகாரி குலேந்ர பிரேமதாச, மணல்தீவு பொது சுகாதார பரிசோதகர் தனஞ்சய மனோஜ் உள்ளிட்ட அதிகாரிகளின் நேரடி பங்கேற்புடன் சடலமானது நேற்று (10) தோண்டி எடுக்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலைக்கு பிசிஆர். மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, புத்தளம் வேப்பமடு பிரதேசத்தை சேர்ந்த 56 வயதான மொஹம்மட் நிஸ்தார் என்பவர் கடந்த 4 ஆம் திகதி வீட்டிலேயே மரணித்துள்ளார். இந்நிலையில் அவர் அன்றைய தினமே, தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மாற்றமாக வேப்பமடு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடும் சுகயீனம் காரணமாக இறந்த குறித்த நபரின் 37 வயதான மகள் பாத்திமா சஹானா கடந்த 6 ஆம் திகதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் அன்றைய தினமே வீட்டில் வைத்து ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட நபரின் மனைவி 51 வயதான சித்தி அஜீபாவும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனைவி, மகளின் சடலங்கள் தொடர்பில் புத்தளம் வைத்தியசாலையில் முன்னெடுத்த பிசீஆர். பரிசோதனைகளின்போது அவ்விருவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையிலேயே, ஏற்கனவே மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்ட 56 வயதான நபரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், புத்தளம் மருத்துவ அதிகாரி அலுவலகம் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த புத்தளம் பொலிஸார், புத்தளம் நீதிமன்றில் முன்வைத்த விடயங்களை மையப்படுத்தி சடலத்தை மீள தோண்டி எடுப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டது.

தோண்டி எடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் புத்தளம் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர். பரிசோதனைகளில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறான நிலையில், குறித்த நபரின் நல்லடக்கத்தில் கலந்து கொண்டதாக் கூறப்படும் மெளலவி ஒருவர் உட்பட சுற்றியுள்ள 9 வீடுகளில் வசிக்கும் 30 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாக மணல்தீவு பொது சுகாதார் பரிசோதகர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »