நீதியமைச்சின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் வகையிலான ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நியமனமானது முறையற்றது என்பதுடன் சட்டமியற்றுதல் தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்குப் புறம்பானதுமாகும்.
சட்டரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினதும் மக்கள் ஆணையைக் கொண்டிருக்கும் ஜனாதிபதியினதும் அதிகாரங்களை பிறிதொரு கட்டமைப்புக்கு வழங்குவதன் விளைவாக மக்களின இறையாண்மை மிகமோசமாகப் பாதிக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமன்றி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான பணிகளை முன்னெடுப்பதற்கு செயலணியின் தலைவர் உள்ளடங்கலாக உறுப்பினர்கள் கொண்டிருக்கக் கூடிய தகைமை, நிபுணத்துவம் மற்றும் பொருத்தப்பாடு தொடர்பில் வலுவான சந்தேகங்கள் காணப்படுவதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கையை ஆராய்ந்து, அதுகுறித்த சட்டவரைபைத் தயாரிப்பதற்கான ஜனாதிபதி செயலணி பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள சூழ்நிலையில், இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.