ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட் சிக்கு வந்தது முதல் தற்போதுவரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 905 கோடி ரூபா அச்சிட்டுள்ளதால் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அனைத்துப் பொருட்களின் விலைகள் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 2022ஆம் ஆண்டில் இதுவரையான 25 நாட்களில் மாத்திரம் 15 ஆயிரத்து 704 கோடி ரூபாவை அரசாங்கம் அச்சிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தென் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:
2021 ஜனவரி முதல் டிசம்பர் (2021 இல்) மட்டும், அரசாங்கம் 67 ஆயிரத்து 833 கோடி (678.33 பில்லியன்) அச்சிட்டுள்ளது. இதில் டிசம்பர் 31ஆம் திகதி மாத்திரம் 66 ஆயிரத்து 500 இலட்சம் அச்சிட்டுள்ளது.
இதேவேளை, அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் 28 ஆயிரத்து 942 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது. அஜித் நிவார்ட் கப்ரால் ஆளுநராக பதவியேற்ற போது, மத்திய வங்கியின் அரசாங்கப் பத்திரங்களின் முகமதிப்பு ஆயிரத்து 284.37 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. ஆனால், இன்று ஆயிரத்து 574.79 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் (ஜனவரி 2020) இன்று வரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 905 கோடி ரூபா (1,499.05 பில்லியன் ரூபா) அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி பத்திரங்களின் முகமதிப்பு (ஜனவரி 25, 2022இல்) ஆயிரத்து 573.79 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.
திறைசேரியின் செயலாளரின் தேவைக்கு அமைய, மத்திய வங்கியின் ஆளுநர் பணத்தை அச்சிடுகிறார்.
இலங்கை மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரிலிருந்து தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை 7 ஆயிரத்து 474 கோடி ரூபா மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளது. அதாவது, மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் 2020 வரை அச்சிடப்பட்ட பணத்தை விட 20 மடங்கு அதிகமாக கடந்த 25 மாதங்களில் அச்சிட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது, பணம் அச்சிடுவது கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. 1950 முதல் இன்று வரை மத்திய வங்கியின் 14 ஆளுநர்களின் கீழ் அச்சிடப்பட்ட தொகையை விட பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் மற்றும் நிவார்ட் கப்ராலின் கீழ் 20 மடங்கு அதிகமான பணம் அச்சிடப்பட்டுள்ளது.
ஜோன் கொத்தலாவல, பண்டாரநாயக்க, டட்லி சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோரின் கீழ் அச்சிடப்பட்ட மொத்தத் தொகையை விட 20 மடங்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அச்சிட்டுள்ளது.
பணத்தை அச்சடிப்பதால், பணவீக்கம் அதிகமாகவுள்ள நாடுகளுடன் இலங்கையும் இணைந்துள்ளது. மத்திய வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை இன்றி திறைசேரி செயலாளரும் மத்திய வங்கி ஆளுநரும் சர்வாதிகாரி போன்று தன்னிச்சையாக பணத்தை அச்சுடுகின்றனர் என்றார்.
(யோ.தர்மராஜ்)