பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், எம்பிலிபிட்டி – பனாமுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கைக்குண்டை வைப்பதற்காக நபரொருவரிடமிருந்து தான் 50,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையினால், ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட CCTV காணொளியில் பதிவாகிய நபரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், 50,000 ரூபா பணத்தை வழங்கியதாக கூறப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைக்குண்டு வைக்கப்பட்டமை தொடர்பிலான முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களை கைது செய்வதற்கான துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (TC)