(இராஜதுரை ஹஷதன்)
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே எதிர்கட்சியை போன்று செயற்படுகிறோம். 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சியை முழுமையாக இல்லாதொழிக்கும் பிரசாரத்தை எதிர்க் கட்சியினர் எவரும் முன்னெடுக்கவில்லை. பொதுஜன பெரமுனவினரே சுதந்திர கட்சிக்கு எதிராக செயற்பட்டனர்.
நல்ல எண்ணத்துடன் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்ததன் நோக்கம் குறுகிய காலத்தில் பொய்யாக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் சிறந்த நோக்கத்துடன் ராஜபக்க்ஷர்களிடமிருந்து வெளியேறினேன். ஊழல் மோசடிக்கு எதிரான அரச நிர்வாகத்தை முன்னெடுப்பது 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார மேடைகளில் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது. சிறந்த ஆட்சிக்காக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை உருவாக்கி முழுமையான ஆதரவை வழங்கி ஜனாதிபதியின் அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு விட்டுக் கொடுத்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.