இனம், மதம், சாதி அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதாக உதாரணங்களுடன் சுட்டிக்காட்டிய மாத்தறை மாவட்ட சாசனாரக்ஷக சபையின் பதிவாளர் பரடுவ ஜினரதன தேரர், அவ்வாறில்லாமல் அனைவரையும் சமமாக நடத்தும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, தென் மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வு, நேற்றைய தினம் (22) திக்வெல்ல பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதோடு, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
மதத் தலைவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், செயலணியிடம் தங்கள் ஆலோசனைகளை முன்வைத்ததோடு, சிலர் எழுத்து மூலமும் முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.
பண்டைய காலத்தில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாடாக இலங்கை இருந்தது. பல்வேறு படையெடுப்புகளால் அது மாறியது. இந்நிலையை மாற்றி, ஒரு நாட்டில் ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஜினரதன தேரர் பாராட்டினார்.
இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் எண்ணக்கருக்களைக் கருத்திற்கொண்டு, அவை தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி வட மாகாணத்தில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
அதன் பின்னர், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களைப் போன்றே கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள அலுவலகத்திலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்தவர்கள், செயலணி முன்னிலையில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
தென் மாகாண மக்கள், தங்காலை மாவட்ட செயலகத்தில் இன்று தமது கருத்துக்களை சமர்ப்பிக்க முடியும்.
செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித கலகொட அத்தே ஞானசார தேரர், ஏனைய உறுப்பினர்களான பேராசிரியர் சாந்தி நந்தன விஜேசிங்க, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவலகே மற்றும் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.