(எம்.மனோசித்ரா)
நாட்டில் 100 சத வீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளது. 3 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒருவர் கூட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களால் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்புபெற முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்டிஸ் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (14) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இரு கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் கூட அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் மூன்று கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒரு தொற்றாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். எனினும் இவர் நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராவார்.
எவ்வாறிருப்பினும் இவர் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளமையால் கொவிட் -19 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவார் என்று நாம் நம்புகிறோம். ஒமிக்ரோன் வைரஸ் பலவீனமானது என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அது தவறாகும் என்றார்.