எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
ஒவ்வொரு தனி மனித வாழ்வின் இயல்பு நிலைக்கு பெரும் சவாலாகவும் ,ஒரு குடும்பத்தின் நிம்மதிக்குப் சந்தோசத்திற்கும் பரம விரோதியாக, ஒட்டு மொத்த மானிட உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுதான் இந்நாட்களிலும் இக்கால கட்டத்திலும் அதிகம் அதிகம் சிலாகிக்கப்படும் தொற்றா நோய்களில் ஒன்றாக நாம் அடையாளம் காண்பது புற்று நோய்கள் ஆகும்.
இதற்காகவே உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்று புற்றுநோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் பாரிய அளவில் சமூகத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு நாளாக இது பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய முன்முயற்சியாகும். இது பல மில்லியன் கணக்கிலான உயிர்களை மரணத்திலிருந்து பாதுகாக்கின்றது. இதற்காக ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வினை ஏற்படுத்த, நோய் பற்றிய கல்வியினை ஒவ்வொருவருக்கும் வழங்குதல் மற்றும் நாட்டு அரசாங்கங்களுக்கும் தீர்மானமெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் நோய் தடுப்பு பற்றிய அழுத்தங்களை பிரயோகித்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது
எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவருக்கு என்று கவலையற்றிருந்த காலங்கள் எல்லாம் மலையேறி இன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புற்றுநோயின் அவலம் அதனால் ஏற்படும் நிம்மதியற்ற வாழ்வின் பிரதிபலிப்புக்கள் இல்லாமலில்லை என்றால் அது மிகையல்ல.
நவீன விஞ்ஞானத்தின் பிரதிபலிப்புக்களாலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மேம்பாட்டை (Healthy Life Style Modification) மனித குலம் வாழத்தவறியதாலும் இலாபத்தை மட்டும் நோக்காக கொண்ட கலப்படம் நிறைந்த வணிகத்தினாலும், சமூக வடுவென(Social Stigma) நினைத்து தங்களுக்குள் மறைத்துக் கொண்ட தீய நடைமுறைகளாலும் பெரும் கைசேதத்தை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
புற்று நோய் என்பது மனிதனுக்கான சாபக்கேடல்ல.செய்த வினைக்கான தண்டனை என ஒதுக்கப்படுவதுமல்ல.மாறாக அதற்கான சிகிச்சை முறைகளும் முறையான வழிகாட்டல்களும் நிறையவே மலிந்து கிடக்கிறது.
செல்வந்தனால் அல்லது செல்வத்தால் மாத்திரமே சுகப்படுத்த முடியும் என்ற மூட நம்பிக்கையை துறந்து அனைவராலும் இந்நோயை வெல்ல முடியும்(இறைவன் நாடினாலன்றி) என்ற எண்ணக்கருவிலான நம்பிக்கை முதலில் சமூகத்தில் விதைக்கப்பட வேண்டும்.
நோயின் ஆரம்ப அறிகுறிகளுக்கான திரையிடல் பரிசோதனை(Screening) தொடங்கி உக்கிர நிலை வரைக்குமான அனைத்து வசதிகளும் சிகிச்சை முறைகளும் இலவசமாக அரச வைத்தியசாலைகளில் நிறைவாக வழங்கப்படுகிறது.
தடுப்புப்பிரிவுகள் என்றும் நோய்நிவாரண பிரிவுகள்
(Preventive and curating units) என்றும் முறையான நடைமுறைகள் இருக்க பெரும்பாலான மக்களின் கவனயீனமும் மூட நம்பிக்கையுமே பெறுமதியான பல உயிர்களும் பெறுமதிமிக்க எம் பொருளாதாரமும் இழந்து தவிக்க காரணிகளாக அமைகின்றது.
உடலில் காணப்படும் அசாதாரண கட்டிகள்,நாட்பட்ட வலிகள்,உடற்றொழிற்பாட்டில் (உணவை உட்கொளவது தொடங்கி கழிவு வெளியேற்றல் வரை) ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் அல்லது நாட்பட்ட மாற்றங்கள் (Chronic changes)எமக்கு தென்படும்போது உடன் வைத்திய உதவியை அல்லது முறையான வைத்திய ஆலோசனைகளை பெற ஒரு போதும் தயங்காதீர்கள்.
நாம் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எமது உயிருக்கு நாம் வைக்கும் உலை என்பதையும் மறந்து விடாதீர்கள்.
புற்று நோய் ஒரு குணப்படுத்த முடியாத அல்லது மருத்துவமில்லாத மரண வியாதியல்ல.முறையான பரிசோதனைகளாலும் முறையான சிகிச்சை முறைகளாலும் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஒரு தொற்றா நோய் என்ற கருத்தை சமுதாயத்தில் விதைத்து......
புற்று நோய்க்கெதிரான வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துச்செல்ல அதனை ஒழித்து புது யுகம் படைக்க நாம் ஒவ்வொருவரும் முன் வருவோம்.
அந்த வகையில் நாம் வாழும் சூழலை எடுத்துக் கொண்டால் குறுகிய நிலப்பரப்பிற்குல் அதிக சனநெரிசலை கொண்டாக சமூகமாகவும் அதுவும் முஸ்லிம்,தமிழ் சமூகம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தாங்குடி,ஏறாவூர்,வாழைச்சேனை, ஓட்டமாவடி,செங்கலடி பிரதேசங்களில் அதே போல் அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களிலும் அதே போல் நாட்டினஸ பெரிய நகரங்களை எடுத்துக் கொண்டால் அதிலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். நாம் வாழும் சூழலே நம் அனைவரையும் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்குகின்றது குறிப்பாக அண்மைகால தரவுகளில் அடிப்படையில் அதிகமான மக்கள் புற்றுநோய்க்கு ஆல் ஆகி வருகின்றார்கள் என்பதை ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
எமது பிரதேசங்களில் திடீர் மரணமாகி இறக்கின்றவர்களின் நிலைமைகள் என்ன? என்று கூட நாம் ஆரயப்பட வேண்டிய தேவை இன்று காணப்படுகின்றது. அது மாத்திரமின்றி குறிப்பாக இளைஞர் சமூகம் புகைபிடித்தல் போன்ற தீய குணங்களுக்கு ஆளாகி தங்களையும் அதனுடன் சேர்த்து சமூகத்தையும் அழிக்கின்றார்கள். புகைப் பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய், புகைப் பிடிப்பவர்களை விட புகைப்பவர்களின் அருகில் இருந்து அந்த புகையைச் சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் 10 மடங்கு அதிகமாக வர வாய்ப்புள்ளது. நுரையீரல் புற்றுநோய் 87 சதவீதம் புகைப்பிடிப்பதால் வருகிறது. நுரையீரல் மட்டும் இல்லாமல் வாய், தொண்டை, கணையம், கழுத்து, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்றவைகளில் ஏற்படும் புற்று நோயும் புகைப்பிடிப்பதால் அதிகம் வருகிறது.
அதே போல் இளைஞர்களையும் வயோதிப சமூகத்தையும் ஆட் கொள்ளும் இன்னொரு தீய பழக்கம்தான் ஹான்ஸ், புகையிலை போன்றவற்றை வாயில் மென்று உபயோகப்படுத்துவதால் இவர்களுக்கு தொண்டை, கன்னம், பல்ஈறுகள் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுகின்றது. சிகெரெட் (புகை) மற்றும் ஹான்ஸ்/புகையிலை போன்றவை வாயில் மெல்லுதல் இரண்டும் ஒன்றுதான். புகையிலையில் நிக்கோடின் உள்ளது இந்த நிக்கோடின் அதிக நச்சுத் தன்மை உடையதாகும் இதன்மூலம் மனித இனத்திற்கு அழிவை தவிர வேற என்ற நன்மையும்மில்லை. ஆகவே இத்தீய செயற்பாடுகளில் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பெறுவது காலத்தின் தேவையாகும்.
நீண்ட நாட்களாக புற்றுநோய்க்கான அறிகுறிகள் உடலில் காணப்பட்டாலும் அதனை சரியான முறையில் அடையாளம் காணாமல் விட்டதன் காரணமாக பெறுமதிமிக்க உயிர்களை நாம் காவு கொள்கின்றோம் அதற்காக அரச மருத்துவ மனைகளில் பல்வேறு வகையாக பரிசோதனைகள் மேற்கொண்டு நோய்களை கண்டறிவதற்கான பல்வேறு வழிமுறைகளும் நவீன சிகிச்சை முறைகளும் இன்று புற்றுநோயிலிருந்து மனித உயிரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் இந்நோய்யினால் எமது நாட்டில் எங்கே பாதிக்கப்பட்ட ஒருவருக்கு யாரும் உதவ முடியாத சூழல் காணப்படுமாயில் அவர்களுக்கு உதவ எமது கிழக்கு மாகாணத்தில் அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது முழு இலங்கையையும் சேர்ந்த புற்றுநோயாளர்களுக்கு முழுக்க முழுக்க இலவசமான சேவைகளை வழங்கிவருகின்றது. குடும்ப சூழலில் பராமரிக்க முடியாத நோயாளர்களை இங்கு அவர்களுக்காக சகலவிதமான வசதிகளை மேற்கொண்டு பராமரித்து வருகின்றது குறிப்பாக ஒவ்வொரு நோயாளர்களை தனித்தனியே சிறப்பான முறையிலும் மனிதாபிமான முறையில் தங்கள் சேவைகளை வழங்கி வருகின்றது இங்குள்ள நோயாளர்களை நாளாந்தம் மட்டக்களப்பு போதன வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று பின்னர் மீண்டும் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லக்கூடிய வாகன வசதிகளும் அத்தோடு இங்கு பராமரிப்பில் உள்ள நோயாளர்களுக்கு கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் கனிவர்க்கம்,காய் கறிகளை உணவுக்காக வழங்குகின்றார்கள் இதற்காகவே சுமார் 5 ஏக்கர் கொண்ட தோட்டம் மற்றும் பண்ணைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலமாகவே நோயாளர்களை நேர்த்தியான முறையில் உபசரித்து வருகின்றார்கள் அத்தோடு இங்கு ரம்மியமான சுற்று சூழலும் அழகிய பூங்கா வசதிகளும் நோயாளிகள் தங்கள் கவலைகளை மறந்து சிகிச்சை பெற உதவுகின்றது.
மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னல்படும் உறவுகளின் நலனுக்காக...
புதிதாகக் கட்டப்பட்டு பாவனைக்குத் தயாராகவிருக்கும் பொழுதுபோக்கு நிலையம் மற்றும் Palliative care கட்டடம்.
பொழுதுபோக்குக் கட்டடத்தினுள் தொலைக்காட்சி பார்ப்பதற்கான ஏற்பாடு, கரம்போட், டாம்போட், பெட்மிண்டன் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் போன்றன செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், நோயாளர்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்தி தாமும் மகிழ்வுற்று, ஏனைய நோயாளர்களையும் மகிழ்வூட்டும் வகையில் கலை நிகழ்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பூந்தோட்டங்களை வளர்ப்பதில், பராமரிப்பதில் ஆர்வமுள்ள நோயாளர்கள் அந்த வேலைகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பல வேலைத்திட்டங்கள் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருக்கும் நோயாளர்களின் நலன்கருதி மேற்கொள்ளப்படுகின்றன.
இப்புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையமானது கடந்த மூன்று வருடங்களாக
நாடளாவிய புற்றுநோயாளர்களுக்கான முற்றிலும் இலவசமான சேவைகளை வழங்கி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்த விடயமே ஆகவே
இந்நோயினால் பாதிக்கப்பட்டு நொந்து வாழ்வின் கடைசி நிமிடங்களை காத்து ஏங்கி நிற்கும் எமது உறவுகளுக்கான அவர்களது குடும்பத்தினருக்கான
உளவியல் ஆறுதல்களையும் நிம்மதியான வாழ்வையும், பராமரிப்பிற்கான சகல வசதிகளையும் செய்து வருகின்றது.
ஒரு மனிதனை வாழ வைத்தவன் முழு மனித சமூகத்தையும் வாழவைத்தவனாவான்
என்ற இறை வாக்கினை இலக்காகக் கொண்டு இம்மைக்கும் மறுமைக்கமான சந்தோசத்திற்காக உழைப்போம் என்று கூறி விடை பெறுகின்றேன்.