பதுளையில் அதிபர் ஒருவரை முழந்தாளிடச் செய்ய வைத்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளிலிருந்து ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலாமைச்சர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர். பவானியினால் பதுளை பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த வாழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த வழக்கு மத்தியஸ்த சபையிடம் ஒப்படைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தாா்.
அதற்கமைய, இரு தரப்பினரும் பதுளை மத்தியஸ்சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனா். இதன்போது இரு தரப்பினரும் சமாதானத்துக்கு வந்துள்ளனா்.
இந்நிலையில், மத்தியஸ்த சபையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான நடவடிக்கைக்கமைய குற்றவாளியாக கருதப்படும் சாமர சம்பத் தசநாயக்கவை முழுமையாக விடுதலை செய்வதாக நீதவான் சமிந்த கருணாதாச அறிவித்துள்ளார்.
இதேவேளை, அதிபா் ஆர். பவானி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.