Our Feeds


Saturday, February 19, 2022

ShortNews

ஷெஹான் மாலக என்ற இளைஞனை பாதாள உலக உறுப்பினர் போல் கைது செய்ய வேண்டியதில்லை - முஜிபுர் ரஹ்மான் - VIDEO


 

(நா.தனுஜா)


உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தண்டனை வழங்குவதாகக்கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது.


இருப்பினும் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் போதியளவு ஆதாரங்கள் இல்லையெனக்கூறி விடுதலை செய்யப்பட்டு வருகின்றார்கள்.

ஆகவே இந்தச் சம்பவத்தை அரசாங்கம் அதன் தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மையகாலங்களில் நாடளாவிய ரீதியில் பதிவாகும் குற்றச்செயல்கள் வெகுவாக அதிகரித்துவருகின்றன. அதனுடன் இணைந்ததாக அரசநிர்வாகமும் சட்டத்தின் ஆட்சியும் முழுமையாக சீர்குலைந்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

எனவே நாடு படிப்படியாக மிகமோசமான நிலையைநோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கம் அதுபற்றிய எவ்வித கரிசனையுமின்றிச் செயலாற்றிவருகின்றது.

மிகக்குறுகிய காலத்தில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அரசாங்கம் சாதாரணமான விடயமாகக் கருதினாலும், கடந்த காலங்களில் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது என்பதை எம்மால் புரிந்துகொள்ளமுடிகின்றது.

இறக்குமதிகளை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் விளைவாக மூலப்பொருட்களை இறக்குமதிசெய்து முடிவுப்பொருள் உற்பத்தியில் ஈடுபடும் பல கைத்தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதன் காரணமாக பெருமளவான முயற்சியாளர்கள் தமது வருமானத்தை இழந்திருக்கின்றார்கள். இருப்பினும் இந்த நெருக்கடிக்கு அரசாங்கம் தற்போதுவரை எவ்வித தீர்வையும் வழங்கவில்லை. தற்போதைய அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும்பங்கு நேரில்வரிகளின் ஊடாகவே கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

அவ்வாறு திரட்டப்பட்ட வருமானத்தில் 70 சதவீதமானவை கடந்த 2005 - 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்களையும் அவற்றுக்கான வட்டியையும் மீளச்செலுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறியதன் பின்னர் நேர்வரிகள் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக 15 சதவீதமாகக் காணப்பட்ட நேர்வரிகளில் ஒன்றான பெறுமதிசேர்வரியை தற்போதைய அரசாங்கம் 8 சதவீதமாகக் குறைத்தது. அதன்காரணமாக நாட்டின் தேசிய வருமானம் பெருளவால் வீழ்ச்சிகண்டது.

 

இவ்வாறான பல்வேறு நெருக்கடிகள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.  அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு அழைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் ஷெஹான் மாலக என்ற இளைஞர் வீதியில் சென்றுகொண்டிருக்கும்போது வெள்ளை வேனில் வந்த குற்றப்புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் வாக்குமூலம் பெறவேண்டியிருந்தால் அவரைக் கைதுசெய்வதற்கு உரியவாறான முறையொன்று உள்ளது. அதனைவிடுத்து பாதாள உலகக்குழு உறுப்பினரையோ அல்லது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவரையோ கைதுசெய்வதுபோன்று சுற்றிவளைத்துக் கைதுசெய்யவேண்டிய அவசியமில்லை.

அடுத்ததாக உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தண்டனை வழங்குவதாகக்கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிபீடமேறியது. ஜனாதிபதித்தேர்தலின்போது இவ்விடயமே ஆளுந்தரப்பின் பிரதான பிரசாரப்பொருளாகக் காணப்பட்டது.

இருப்பினும் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் போதியளவு ஆதாரங்கள் இல்லையெனக்கூறி விடுதலைசெய்யப்பட்டுவருகின்றார்கள்.

தற்போதைய அரசாங்கம் எதிரணியில் இருந்தபோது தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்று சிலரது பெயர்களைப் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக்கூறியது. அவர்களும் இப்போது விடுதலைசெய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே இந்தச் சம்பவத்தை அரசாங்கம் அதன் தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்திக்கொண்டிருப்பது தெளிவாகின்றது.

தற்கொலைக்குண்டுதாரியான சஹ்ரானுடன் நேரடியாகத் தொடர்புபட்ட சாராவைக் கைதுசெய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாம் வலியுறுத்திவருகின்றோம்.

இருப்பினும் அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக சஹ்ரான் வீதியில் நடந்துசென்றபோது அவருடன் பேசியவர்கள், சஹ்ரான் பொருட்களைக் கொள்வனவு செய்த கடையின் உரிமையாளர் போன்றவர்களையே அரசாங்கம் கைதுசெய்திருக்கின்றது. அவர்கள் தாக்குதல் சூத்திரதாரிகள் அல்ல. மாறாக சஹ்ரானை வழிநடத்தியவர்களே சூத்திரதாரிகள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »