(எம்.மனோசித்ரா)
அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியமை கோமாளித்தனமானதொரு நாடகமாகும். ஜனாதிபதியையும் ராஜபக்ஷக்களையும் பதவி விலகுமாறு கோரியே மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதனை விடுத்து இவ்வாறு அமைச்சர்கள் பதவி விலகி அரங்கேற்றப்படும் நாடகங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துக் கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், அமைச்சு பதவிகளை ஏற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வருமாறு ஜனாதிபதி ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதன் மூலம் அவரது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.