Our Feeds


Sunday, November 6, 2022

ShortTalk

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் - திலகர் அறிவிப்பு



மலையக மக்களின் அடையாளம் கருதி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் போட்டியிடக்கூடிய சாத்தியம் உள்ளது.” – என்று அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைபபாளரும், நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார்.


அட்டனில் 06.11.2022 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


மலையக கட்சிகளின் இணைவு என்பது இப்போதைய தலைமுறைக்கு புதிய விடயமாக இருந்தாலும், எனது அரசியல் பயணத்தில் இதற்கு முன்னர் ஒற்றுமைகளை பல தடவைகள் பார்த்துள்ளேன். 1999 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில்தான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்திய வம்வாவளி மக்கள் பேரணி என பெயரும் இடப்பட்டது. தற்போதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கூட அந்த சின்னத்தில்தான் போட்டியிட்டுதான் அரசியல் அறிமுகம் பெற்றார்.


1999 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில் போட்டியிட்ட இ.தொ.கா, 2009 இல் அதே சங்கத்தின் தலைமையகத்தை தாக்கியபோது, அதை நேரில் கண்டவன் நான். 99 இல் ஏற்பட்ட ஒற்றுமைக்கு 2009 இல் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியும்.


2001 ஆம் ஆண்டு மல்லியப்பு சந்தியில் ஆறுமுகன் தொண்டமானும், சந்திரசேகரனும் ஒன்றிணைந்தார்கள். இரு துருவங்கள் இணைவு என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தற்போது 2022 இல் இணைவு நடைபெறும்போது தற்போதைய மலையக மக்கள் முன்னணியில் தலைவர் எப்படியான கருத்தை வெளியிட்டுவருகின்றார் என்பது மக்களுக்கு புரியும்.

இந்த ஒற்றுமை மக்கள் நலன் சார்ந்ததாக இருந்திருந்தால், விழாவுக்கு அழைத்து விருந்தினராக மாமன், மச்சான், தந்தை, மகன் என உறவு கொள்வதால் மக்களுக்கு எதுவும் நடக்கப்போவதில்லை. ஒரு வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டு நடவடிக்கை இடம்பெறவேண்டும்.


அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே மலையக அரசியல் அரங்கத்தின் இலக்காகும். எனவ, ஆயிரம் ரூபா எனக் கூவிக்கொண்டு இருப்பதில் பயன் இல்லை. இணைந்து செயற்படுபவர்கள் இது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.


அடுத்த தேர்தலில் மலையக அரசியல் அரங்கம் நிச்சயம் போட்டியிடும். உள்ளாட்சி, மாகாண மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும். ஏன் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால்கூட அடையாளம் கருதி களமிறங்குவோம். வெற்றி, தோல்வியைவிட எமது மக்களின் அடையாளத்துக்காக போட்டியிடலாம். இளைஞர், யுவதிகளுடன் கைகோர்த்து அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னெடுப்போம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »