Our Feeds


Wednesday, November 23, 2022

News Editor

ஓமான் மற்றும் டுபாயில் நிர்க்கதியாகி இருக்கும் பெண்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை - மனுஷ


 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு   பணியகத்தின் அனுமதியில்லாமல்  ஓமானுக்கு சென்ற  77 பெண்களும் டுபாய்க்கு சென்ற  77 பெண்களும் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக  செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பேற்கவுள்ளது என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார்.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (22) பிரதி  சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தொடர்பான கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தும் பணியகத்தின் அனுமதியில்லாமல் சென்றவர்களில், ஓமானில் 77 பெண்களும் டுபாயில் 77 பெண்களும் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஒருவருக்கு சுமார் 10 இலட்சம் ரூபா  வரையில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பேற்கவுள்ளது.   இதற்கான அனுமதி அமைச்சரவையின் ஊடாக பெறப்பட்டுள்ளது. 

அத்துடன் சுற்றுலா விசா, போலி ஆவணங்களை சமர்ப்பித்து நாட்டில் இருந்து வெளியில் சென்றவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதில் பிரச்சினை இருக்கின்றது.

இதுதொடர்பாகவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அவர்களை அழைத்து வருவதற்கு முன்னர், குற்றப்புலனாய்வுத்துறையினரை அங்கு அனுப்பி அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து, குற்றம் புரிந்தோரை கண்டுபிடிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தநிலையில் சுற்றுலா வீசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்று அங்கிருந்து எல்லையின் ஊடாக ஓமானுக்கு பெண்களை அழைத்துச்சென்ற குற்றச்சாட்டின்பேரில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து 190 பெண்களை அனுப்பவிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டபோதும், சட்டத்தரணிகளின் முயற்சிகளால் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன்  பெண்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஓமானுக்கு சட்ட விரோதமான வகையில், அனுப்பும் செயற்பாடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, அபுதாபியின் இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் குஷான் என்ற அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன  என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »